×

இன்று மிலாடி நபி  : எதற்காக இந்த புனித தினம் கொண்டாடப்படுகிறது?

 

இஸ்லாமியர்களின் மிக முக்கியமான பண்டிகைகளில் ஒன்று மிலாடி நபி ஆகும். மிலாத்-உன்-நபி, மீலாதுன் நபி என பல பெயர்களிலும் இந்த பண்டிகை அழைக்கப்படுகிறது. இஸ்லாமிய நாட்காட்டியில் மூன்றாவது மாதமான ரபி உல் அவ்வல் மாதத்தில் மிலாடி நபி கொண்டாடப்படுவது வழக்கம். இந்த நாளில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை நடத்தி வழிபடுவது வழக்கம்.

அரபு மொழியில் மெளலித் என்றால் பெற்றெடுத்தல், கருத்தரித்தல் , வம்சாவளி என்று பொருள். இந்த சொல் எகிப்து போன்ற சிட பகுதிகளில் முக்கியமான வசனமாக கருதப்படுகிறது. இஸ்லாமிய இறை தூதரான முகம்மது நபிகளின் பிறந்த நாளையே மிலாடி நபி திருநாளாக கொண்டாடுகிறார்கள். இதனால் தற்காலத்தில் மெளலித், மிலாடி நபி போன்ற சொற்கள் மிலாடி நபியின் பிறந்த நாளையே குறிப்பதாக உள்ளது. முகம்மது நபி, கிபி 570 ம் ஆண்டு ரபி உல் அவல் மாதம் எனப்படும் இஸ்லாமிய நாட்காட்டியின் மூன்றாவது மாதத்தின் 12 ம் நாளில் மக்கா நகரில் அவதரித்தார். இந்த நாளையே மிலாடி நபியாக நாம் கொண்டாடுகிறோம்.

மிலாடி நபி திருநாள் சன்னி மற்றும் சியா முஸ்லீம்களால் கொண்டாடப்பட்டாலும், சியா முஸ்லீம்கள் தங்களின் ஆறாவது இமாம் ஜாஃபர் அல்-சாதிக்கின் பிறந்தநாளும், முகம்மது நபிகளின் பிறந்த நாளும் ஒன்றாக வருவதாக கருதி ரபி உல் அவ்வல் மாதத்தின் 17வது நாளில் இந்த நாளை கொண்டாடுகிறார்கள். அதே சமயம் சனனி முஸ்லிம்கள், ரபி உல் அவ்வல் மாதத்தின் பன்னிரெண்டாவது நாளில் மிலாடி நபியை கொண்டாடுகிறார்கள். சந்திரனை அடிப்படையாகக் கொண்டே இஸ்லாமிய நாட்காட்டி கணிக்கப்படுவதால் இது ஒவ்வொரு ஆண்டும் மாறுபடுகிறது.

மிலாடி நபியில் என்ன செய்ய வேண்டும்?

இந்த நாளில் முகம்மது நபியின் போதனைகளை போற்றும் விதமாக இஸ்லாமியர்கள் புனித நூலான குரானை வாசிப்பது மிக முக்கிய கடமையாக வைத்துள்ளனர். பெரும்பாலான இஸ்லகாமியர்கள் இந்த நாளில் நோன்பு வைப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இவர்கள் ஏழை எளிய மக்களுக்கு உணவு மற்றும் உடைகளை தானமாக வழங்குவதை வழக்கமாக வைத்துள்ளனர். முகம்மது நபிகளை நினைத்து சிறப்பு தொழுகைகள் நடத்தி, அனைவருடனும் வாழ்த்துக்கள், பரிசுகள் ஆகியவற்றை பகிர்ந்து கொள்வதும் இஸ்லாமியர்களின் வழக்கமாக உள்ளது.