☰
×

9 உயிர்களை பறித்த நடுக்கடல் விபத்து..! – காசிமேடு மீனவர்களின் உடல்கள் மீட்பு... உறைந்த தமிழகம்!

 

சென்னை காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து கடந்த மாதம் 29-ஆம் தேதி, செல்வழகன் என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில், படகு ஓட்டுநர் சூர்யா உள்ளிட்ட 9 மீனவர்கள் ஆழ்கடலில் மீன்பிடிக்கச் சென்றனர். ஆந்திர மாநிலம், நிஜாம்பட்டினம் அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, புயல் எச்சரிக்கை காரணமாகப் பாதுகாப்பு கருதி நிஜாம்பட்டினம் துறைமுகத்தில் விசைப்படகை அவர்கள் நிறுத்தியுள்ளனர்.

இதையடுத்து, மீண்டும் அவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றபோது, நடுக்கடலில் விசைப்படகின் எஞ்சின் திடீரென பழுதடைந்துள்ளது. இதுகுறித்து, அருகில் இருந்த மற்றொரு விசைப்படகிற்கு கடந்த 3-ஆம் தேதி அதிகாலை 3.30 மணி அளவில் வயர்லெஸ் மூலம் தகவல் தெரிவித்துள்ளனர். அதன்பிறகு அந்த 9 மீனவர்களையும் தொடர்புகொள்ள முடியாமல் போனது.

இதனால், அதிர்ச்சியடைந்த மீனவர்களின் குடும்பத்தினர், அவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, மாயமான மீனவர்களைத் தேடும் பணியில் கடலோரக் காவல் படையினர் ஈடுபட்டனர். ஹெலிகாப்டர்கள் மற்றும் கப்பல்கள் மூலமாகவும் தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்றது.

இதற்கிடையே, ஆந்திர மாநிலம் ஓங்கோல் அருகே 7 மீனவர்களின் உடல்கள் அடுத்தடுத்து கரை ஒதுங்கின. அவர்கள் தமிழக மீனவர்கள் என்பது உறுதி செய்யப்பட்டது. மாயமான மீனவர்களின் குடும்பத்தினர் பெரும் அதிர்ச்சியும் சோகமும் அடைந்தனர்.

கரை ஒதுங்கிய மோகன், சூர்யா, முருகன், விஜயகாந்த், குப்புசாமி, குப்பன், அரவிந்த் ஆகிய 7 பேரின் உடல்களும் அடையாளம் காணப்பட்டு, அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.

எஞ்சி இருந்த மீனவர்களான ராஜேஷ் மற்றும் நாராயணன் ஆகியோரின் நிலை குறித்து எந்தத் தகவலும் கிடைக்காததால் அவர்களைத் தேடும் பணியை கடலோரக் காவல் படையினர் தீவிரப்படுத்தினர். இந்நிலையில், ஆந்திர மாநிலம், கொத்தப்பட்டினம் அருகே உள்ள லட்சுமிபுரம் கடற்கரையோரம் மேலும் இரண்டு மீனவர்களின் உடல்கள் கரை ஒதுங்கின.

அந்த உடல்களை மீட்டு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டதில், அவை மாயமான மீனவர்களான ராஜேஷ், நாராயணன் ஆகியோரின் உடல்கள் என்பது உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து, இருவரின் உடல்களும் உடற்கூறாய்வுக்கு உட்படுத்தப்பட்டு, பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. பின்னர் அந்த உடல்கள், ஆம்புலன்ஸ் மூலம் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

சென்னை காசிமேட்டில் இருந்து மீன்பிடிக்கச் சென்று ஆந்திர கடல் பகுதியில் மாயமான 9 மீனவர்களின் உடல்களும் சடலங்களாக மீட்கப்பட்டு விட்டது குறிப்பிடத்தக்கது.