×

மிக்ஜாம் புயல் நிவாரணம் - முதலமைச்சர் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைக்கிறார்

 

 சென்னையில் மிக்ஜாம் நிவாரண தொகை ரூ.6 ஆயிரம் வழங்கும் திட்டத்தை ஞாயிற்றுக்கிழமை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

சென்னையில் மிக்ஜாம் புயல் மற்றும் வரலாறு காணாத இடைவிடாமல் பெய்த கனமழையினால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான மரங்கள், முறிந்து விழுந்தன. மின்கம்பங்கள் சாய்ந்தன. சாலைகளில் வெள்ளநீர் தேங்கியது. உயிரிழப்பும் ஏற்பட்டது. கோடிக்கணக்கான  பொது சொத்துக்கள் மற்றும் பொருட்கள் சேதமடைந்துள்ளன.  இந்த சூழலில் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண நிதியாக ₹6000 வழங்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இந்த தொகை அந்ததந்த பகுதிகளில் உள்ள நியாயவிலை கடைகளின் மூலம் ரொக்கமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. புயல் வெள்ளத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு 5 லட்சம் ரொக்கமாக வழங்கப்படும் எனவும், மழையினால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நிவாரணமாக ஹெக்டேருக்கு 17 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும் எனவும் கூறியுள்ளார். 

இந்த நிலையில்,  மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.6,000 நிவாரணம் வழங்கும் பணியை வரும் 17ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் தொடங்கி வைக்கிறார்.