"புற்றுநோய் நோயாளிகளுக்கு மெகா குட் நியூஸ்!" – மருந்துகளின் விலை 70% வரை அதிரடி குறைப்பு!
புற்றுநோய் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், அதன் சிகிச்சைக்கான மருந்துகளை வாங்குவது நோயாளிகளுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் பெரும் பொருளாதார சுமையாக உள்ளது. தரமான சிகிச்சை குறைந்த செலவில் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில், மருந்துகளின் விலையை குறைக்க மத்திய அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது.
அத்தியாவசிய மருந்துகளின் விலையைக் கட்டுப்படுத்த, மத்திய அரசு தேசிய அத்தியாவசிய மருந்துகள் பட்டியலை வெளியிட்டு வருகிறது. இந்தப் பட்டியலில் இடம்பெறும் மருந்துகளுக்கு தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் விலை கட்டுப்பாடுகளை விதிக்கிறது. இந்தப் பட்டியலில் நேரடியாக இடம்பெறாத சில மருந்துகளின் விலையையும் கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
அந்த வகையில் சில புற்றுநோய் மருந்து உற்பத்தி நிறுவனங்கள் இரண்டு முதல் ஏழு மடங்கு வரை கூடுதல் லாபம் வைத்து மருந்துகள் விற்பதை சுகாதார துறை நிபுணர் குழு கண்டறிந்தது.
இதைக் கட்டுப்படுத்த, 'நிவோலுமாப், ஒலாபரிப், டெனோசுமாப்' உள்ளிட்ட, 137 முக்கிய புற்றுநோய் மருந்துகளை, விலை கட்டுப்பாட்டு பட்டியலில் சேர்த்து லாப வரம்பை, 30 சதவீதமாக மத்திய அரசு குறைத்துள்ளது. இதனால் இந்த மருந்துகளின் அதிகபட்ச சில்லரை விலை, 70 சதவீதம் வரை குறையும் என கூறப்படுகிறது.
புதிய விலை குறைப்பு, நவ., 9ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. மருந்து உற்பத்தி நிறுவனங்கள் அடுத்த ஏழு நாட்களுக்குள் திருத்தப்பட்ட புதிய விலை பட்டியலை தங்களின் இணையதளத்தில் வெளியிடுவதுடன், அனைத்து மருத்துவமனைகள் மற்றும் மருந்தகங்களுக்கும் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.
புற்றுநோய் மருந்துகள் பெரும்பாலும் மருத்துவமனைகள் வாயிலாகவே வழங்கப்படுவதால், புதிய விலையில் மருந்துகள் விற்கப்படுவதை மாநில மருந்து கட்டுப்பாட்டு அதிகாரிகள் தீவிரமாக கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மருந்து தட்டுப்பாடு ஏற்படாத வகையில் நிறுவனங்கள் வழக்கமான உற்பத்தியை தொடர வேண்டும் என்றும், விதிகளை மீறி கூடுதல் விலைக்கு விற்றால் அந்த தொகை வட்டியுடன் வசூலிக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக 2019ல், 42 புற்றுநோய் மருந்துகளுக்கு இதேபோல் லாப வரம்பு விதிக்கப்பட்டதில், நாடு தழுவிய அளவில் நோயாளிகளுக்கு ஆண்டுக்கு 984 கோடி ரூபாய் மிச்சமானது. தற்போதைய நடவடிக்கையால் புற்றுநோயாளிகளுக்கு ஆண்டுக்கு 2,500 கோடி ரூபாய் மிச்சமாகும் என கணிக்கப்பட்டு உள்ளது.