தமிழக பாஜகவில் 4 புதிய பொதுச்செயலாளர்கள்? குஷ்பு, மீனாவுக்கு மாநில பொறுப்பு
தமிழக பாஜகவில் புதிதாக 4 பொதுச்செயலாளர்கள் நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு டெல்லி தேசிய தலைமையில் இருந்து அவசர அழைப்பு விடுக்கப்பட்டது.மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் அழைப்பை ஏற்று கோவையில் இருந்து நயினார் நாகேந்திரன் நேற்று முன்தினம் டெல்லி புறப்பட்டு சென்றார். மாநில நிர்வாகிகள் பட்டியலை சில நாட்களுக்கு முன்பு தலைமைக்கு நயினார் நாகேந்திரன் அனுப்பி வைத்திருந்தார். அந்த பட்டியலில் சில முரண்கள் இருப்பதால் நயினார் நாகேந்திரனை அமித்ஷா நேரில் அழைத்து ஆலோசனை மேற்கொண்டதாக தெரிகிறது. முன்னதாக டெல்லியில் பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டாவை பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், மேலிட பொறுப்பாளர் அரவிந்த் மேனன் உள்ளிட்டோர் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டனர்.
அதன்படி, தமிழக பாஜகவில் புதிதாக 4 பொதுச்செயலாளர்கள் நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கே.பி. ராமலிங்கம், கருப்பு முருகானந்தம், வினோஜ் செல்வம், கார்த்தியாயினிக்கு வாய்ப்பு வழங்கப்படவுள்ளதாக தெரிகிறது. புதிதாக நியமிக்கப்பட்ட பாஜக மாநில நிர்வாகிகளின் பட்டியல், வரும் வெள்ளிக்கிழமை என்று வெளியாகவுள்ளது. குஷ்புவுக்கு மாநில பொறுப்பும், மீனா பாஜகவில் சேர்ந்து மாநில பொறுப்பும் பெறலாம் என தகவல் வெளியாகியுள்ளது. சரத்குமார் தேசிய பொறுப்பு கேட்பதால் அவருடைய பெயர் தற்போதைய பட்டியலில் இடம்பெறவில்லை. புதிய நிர்வாகிகளின் பட்டியலுக்கு நட்டா ஒப்புதல் அளித்துவிட்டதாகவும், அமித்ஷா ஒப்புதலுக்காக காத்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.