☰
×

Fairness கிரீம் பயன்படுத்திய சிறுமிக்கு சிறுநீரக பாதிப்பு! இன்புளூயன்சர்களால் நேர்ந்த கொடூரம் 

 

கேரளாவில் சமூக வலைத்தள விளம்பரத்தை நம்பி ஆன்லைனில் ஃபேர்னஸ் கிரீம் வாங்கிப் பயன்படுத்திய 17 வயது சிறுமிக்கு தற்போது கடுமையான சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இன்புளூயன்சர்களால் விளம்பரப்படுத்தப்பட்டு, ஆன்லைனில் வாங்கப்பட்ட சரும நிறத்தை மேம்படுத்தும் கிரீமைப் பயன்படுத்திய பிறகு கேரள மாநிலம் மலப்புரத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமிக்குக் கடுமையான சிறுநீரக நோய் ஏற்பட்டுள்ளது. மெம்ப்ரனஸ் நெஃப்ரோபதி எனும் நோயால் அந்த சிறுமி பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். 
அந்த கிரீமை ஆய்வு செய்ததில், அதில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட பல மடங்கு அதிகமாக (12,500 PPM) பாதரசம் கலந்திருப்பது மருத்துவப் பரிசோதனையில் தெரிய வந்துள்ளது.

மெம்ப்ரனஸ் நெஃப்ரோபதி (Membranous Nephropathy – MN) என்பது சிறுநீரகத்தைப் பாதிக்கும் ஒரு வகையான நோயாகும். இது சிறுநீரகத்தில் உள்ள ரத்தத்தை வடிகட்டும் நுண்ணிய அமைப்பான குளோமெருலஸ் (Glomerulus) பகுதியில் ஏற்படும் பாதிப்பாகும். இதனால் சிறுநீரில் அதிக அளவு புரதம் (Protein) வெளியேறத் தொடங்கும். சரியான நேரத்தில் கண்டறிந்து சிகிச்சை அளிக்காவிட்டால் சிலருக்கு சிறுநீரகச் செயல்பாடு பாதிக்கப்படலாம். சிறுநீரகத்தில் ரத்தத்தை வடிகட்டும் பகுதியில் நோய் எதிர்ப்பு மண்டலத்தின் ஆன்டிபாடிகள் மற்றும் நோய் எதிர்ப்பு புரதக் கூட்டுகள் படிவதால் வடிகட்டும் சவ்வு தடிமனாகிறது. இதன் காரணமாக உடலில் நீர் தேங்கி வீக்கம் ஏற்படலாம்.