மருத்துவ கழிவுகளை கொட்டினால் குண்டாஸ்- ஜூலை 8 முதல் சட்ட திருத்தம் அமலுக்கு வந்ததாக அறிவிப்பு
மருத்துவ கழிவுகளை கொட்டினால் விசாரணையின்றி குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கும் சட்ட திருத்தம் ஜூலை 8 தேதி முதல் அமலுக்கு வந்துள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
உயிரி மருத்துவ கழிவுகளை முறையற்று குவிப்பது பொது சுகாதாரம், சுற்றுச்சூழலுக்கு கடும் அபாயத்தை ஏற்படுத்தக்கூடும். ஆனால், அண்டை மாநிலங்களில் இருந்து வந்து தமிழகத்தில் உயிரி மருத்துவ கழிவுகள் கொட்டப்படுவதாக அடிக்கடி புகார்கள் வருகின்றன. இதனைத் தொடர்ந்து, தமிழகத்தில் உயிரி மருத்துவ கழிவுகளை முறையற்று குவித்தாலோ, அண்டை மாநிலங்களில் இருந்து வந்து தமிழகத்தில் மருத்துவ கழிவுகளை கொட்டினாலோ உயிரி மருத்துவ கழிவு மேலாண்மை விதிகளை மீறியதாக கருதி, விசாரணையின்றி தடுப்பு காவலில் வைக்கும் சட்ட மசோதா கடந்த ஏப்ரல் மாதம் தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.
இந்த சட்ட திருத்த மசோதாவுக்கு கடந்த ஜூன் மாதம் ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்தார். இதனை தொடர்ந்து இந்த சட்ட திருத்தம் கடந்த ஜூலை 8 தேதி முதல் அமலுக்கு வந்துள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.