மருத்துவப் பணிகள் கழகமா அல்லது மதுபானப் பணிகள் கழகமா? – டாஸ்மாக் கிடங்கு சீரமைப்பு ஒப்பந்தம் குறித்து திமுக கேள்வி!
மிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகத்திடம், அம்பத்தூர், திருமழிசை மற்றும் தஞ்சாவூர் ஆகிய இடங்களில் உள்ள டாஸ்மாக் கிடங்குகளைச் சீரமைக்கும் ஒப்பந்தப் பணிகள் வழங்கப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அரசு மருத்துவமனைகளுக்குத் தேவையான மருந்துகள் மற்றும் மருத்துவக் கருவிகளைக் கொள்முதல் செய்து விநியோகிக்கும் நோக்கத்தில் உருவாக்கப்பட்ட இந்த கழகம், மதுபானக் கிடங்குகளைப் பராமரிக்கும் பணியில் ஈடுபடுத்தப்படுவது அதன் அடிப்படை நோக்கத்தைச் சிதைப்பதாகக் கருதப்படுகிறது.
இந்த விவகாரம் தொடர்பாக திமுக தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது. மருந்தும் மதுவும் ஒரே கூரையின் கீழ் இருக்க முடியாது என்று விமர்சித்துள்ள திமுக, பாராசிட்டமால் மாத்திரைகளையும் அறுவை சிகிச்சை உபகரணங்களையும் கையாள வேண்டிய மருத்துவப் பணிகள் கழகம், டாஸ்மாக் கிடங்குகளின் மேற்கூரை மற்றும் ஷட்டர்களைப் பரிசோதிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பது வெட்கக்கேடானது எனச் சாடியுள்ளது.
அரசு மருத்துவமனைகளில் நிலவும் மருந்துத் தட்டுப்பாடு, மருத்துவர்கள் பற்றாக்குறை மற்றும் பழுதான மருத்துவ உபகரணங்கள் போன்ற அடிப்படைப் பிரச்சினைகளைச் சரிசெய்யாமல், டாஸ்மாக் கிடங்குகளுக்கு முக்கியத்துவம் அளிப்பது ஏன் என திமுக கேள்வி எழுப்பியுள்ளது. மருத்துவப் பணிகள் கழகமா அல்லது மதுபானப் பணிகள் கழகமா என்பதை அரசு தெளிவுபடுத்த வேண்டும் என்றும் அக்கட்சி வலியுறுத்தியுள்ளது.