இன்று இறைச்சி கடைகள் செயல்பட தடை..!!
Jan 16, 2026, 09:21 IST
சென்னை, கோவை, சேலம் உள்ளிட்ட அனைத்து மாநகராட்சிகளிலும் இன்று இறைச்சிக் கூடங்கள் மற்றும் இறைச்சிக் கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. ஆடு, மாடு மற்றும் கோழி இறைச்சி விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சி சார்பில் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு பின்வருமாறு;
திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு வெள்ளிக்கிழமை (ஜன. 16) பெருநகர சென்னை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் இயங்கும் பெரம்பூர், வில்லிவாக்கம், சைதாப்பேட்டை மற்றும் கள்ளிக்குப்பம் ஆகிய 4 இறைச்சிக் கூடங்கள் அரசு உத்தரவுப்படி மூடப்படும். எனவே, இறைச்சிக் கடை வியாபாரிகள், பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறது.”
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று ஜனவரி 16ம் தேதி வெள்ளிக்கிழமை திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு பொது அமைதியைப் பேணவும், கலாச்சார முக்கியத்துவத்தைக் கருதியும் தமிழகம் முழுவதும் அனைத்து டாஸ்மாக் கடைகளையும், அனைத்து வகையான மதுபான பார்களையும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் அனைத்து டாஸ்மாக் சில்லறை விற்பனைக் கடைகளும் இன்று மூடப்பட்டிருக்கும். நட்சத்திர ஓட்டல்களில் உள்ள பார்கள், கிளப்புகள் மற்றும் உரிமம் பெற்ற அனைத்து மதுக்கூடங்களும் (FL1 முதல் FL11 வரை) செயல்பட அனுமதி இல்லை. தடையை மீறி மறைமுகமாக மது விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர்கள் எச்சரித்துள்ளனர்.