“அதிமுகவுடன் கூட்டணி வைத்து பிழை செய்து விட்டேன்”- வைகோ
அதிமுகவுடன் கூட்டணி வைத்து பிழை செய்து விட்டேன், இமயம் போல் உயர்ந்திருக்க வேண்டிய மதிமுக பாதாளத்திற்கு சென்று விட்டது என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
ஈரோட்டில் நடைபெற்ற மண்டல மதிமுக தேர்தல் நிதியளிப்பு கூட்டத்தில் உரையாற்றிய மதிமுக பொதுசெயலாளர் வைகோ, “நான் கடந்த காலத்தில் சில பிழைகளை செய்து இருக்கிறேன். அதை ஒப்பு கொள்கிறேன். என் நம்பகத்தன்மையை நானே நாசமாக்கி கொண்டேன். என் அரசியல் வாழ்வின் நம்பதன்மை சுக்குநூறாக்கியது அதிமுகவுடன் கூட்டணி அமைத்தது தான் . 19 மாதம் சிறையில் அடைத்த அதிமுகவுடன் உடன்பாடு வைத்தது பிழையான, தவறான, மன்னிக்க முடியாத முடிவை எடுத்துவிட்டேன். அந்த முடிவை எடுத்து இருக்க கூடாது.
அரங்கேற்றம் திரைப்பட நாயகி போல் என் நிலை ஏற்பட்டது. இமயம் போல் உயர்ந்து இருக்க வேண்டிய மதிமுக அதிமுகவுடன் கூட்டணியால் பாடுபாதாளத்திற்கு போனோம். மதிமுக தமிழ்நாட்டிற்கு எண்ணற்ற சாதனைகளை செய்துள்ளது. 1994ல் நடிகர் விஜய்க்கு வரும் கூட்டத்தை விட பல மடங்கு கூட்டம் எனக்கு வந்தது. ஆற்று வெள்ளம் வடிந்ததை போல மதிமுக தோல்விக்கு பிறகு வடிந்து போய் விட்டது.அது தவறில்லை. நடக்கும் சட்டமன்ற தேர்தல், பேச்சு வார்த்தை, தொகுதி பங்கீடு போன்ற அக்னிபரீட்சைகளை தாண்டி செல்ல வேண்டியது இருக்கிறது. திமுகவுடன் தோழமை கொள்ளுவது என்ற முடிவு எடுத்த பிறகு எவ்வித நிபந்தனைகளையும் விதிக்காமல், மற்ற கட்சிகள் நிபந்தனை விதிக்கலாம், அது அவர்களது உரிமை. மதிமுக எடுத்த முடிவின் படி திமுக ஆட்சிக்கு குந்தகம் விளைவிக்கும் படி எந்த வார்தையும் பேசாமல், கூட்டணி தர்மத்தை கடைபிடிக்கிற கட்சி தமிழகத்தில் மதிமுக போல் எதுவுமில்லை” என்றார்.