×

கருப்பாக நிறத்தால் வாழ்க்கையை வெறுத்து விபரீத முடிவு! கூவத்தில் குதித்து எம்பிஏ மாணவி தற்கொலை

 

சென்னை நேப்பியர் பாலத்தில் இருந்து இளம்பெண் கூவத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் திடீர் திருப்பமாக கருப்பாக நிறத்தால் வாழ்க்கையை வெறுத்து விபரீத முடிவு எடுத்தது தெரியவந்துள்ளது.

சென்னை மெரினா காமராஜர் சாலை நேப்பியர் பாலத்தில் இருந்து கூவம் ஆற்றுக்குள் நேற்று ஒரு இளம் பெண் குதித்ததாக அந்தப் பகுதியில் நின்ற போக்குவரத்து காவலரிடம் இருசக்கர வாகன ஓட்டி ஒருவர் தெரிவித்து விட்டு சென்றார். இதுதொடர்பாக போக்குவரத்து காவலர் அண்ணா சதுக்கம் சட்டம் ஒழுங்கு போலீசருக்கு தகவல் தெரிவித்தார். அண்ணா சதுக்கம் போலீசார் வந்து பார்த்தபோது நேப்பியர் பாலத்தின் நடுவே ஒரு பை இருந்தது. அதில் செல்போன், அண்ணா பல்கலைக்கழக அடையாள அட்டை மற்றும் நோட்டு புத்தகம் ஆகியவை இருந்தன. அடையாள அட்டையை எடுத்து பார்த்தபோது சென்னை பெருங்களத்தூரை சேர்ந்த தனஞ்செயன் மகள் யுவஸ்ரீ (வயது 25) என்பதும், அண்ணா பல்கலைக்கழகத்தில் தொலைதூரக் கல்வியில் எம்பிஏ இரண்டாம் ஆண்டு படித்து வந்ததும் தெரிந்தது. நோட்டை எடுத்து பார்த்தபோது அதில் எனது சாவுக்கு யாரும் காரணம் இல்லை என எழுதி இருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

இந்த நிலையில் இன்று காலை யுவ ஸ்ரீயின் சடலம் கடல் முகத்துவாரத்தில் கரை ஒதுங்கியது. தொடர் விசாரணையில், தனஞ் ஜெயன் ஓய்வு பெற்ற ரயில்வே பணியாளர் என்பதும், அவருக்கு இரண்டு மகள்கள் என்பதும் தெரிய வந்தது. மூத்த மகளுக்கு திருமணம் ஆகிவிட்டது. இளைய மகள் யுவஸ்ரீ எம்பிஏ படித்துக் கொண்டே கேகே நகரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். அவரது விருப்பப்படியே பெற்றோர் வரன் பார்த்து வந்துள்ளனர். இந்த நிலையில் அக்கா நல்ல கலராக இருந்ததால் எளிதில் வரன் கிடைத்தது, நான் கருப்பாக இருக்கிறேன்.. என தாழ்வு மனப்பான்மையோடு அடிக்கடி பெற்றோரிடம் பேசியுள்ளார். அதெல்லாம் ஒரு பிரச்சனை இல்லை. கருப்பாக இருந்தாலும் அழகாக இருக்கிறாய்.. என யுவஸ்ரீ புலம்பும்போதெல்லாம் அவரை தேற்றியுள்ளனர். ஆனாலும் இந்த விபரீத முடிவை எடுத்தது, எங்களுக்கே பேரதிர்ச்சியாக உள்ளது என குடும்பத்தினர் தெரிவித்தனர்.