த.வெ.க ஆட்சியமைந்த 4 மாதங்களில் சாதித்தார்களா?- மேயர் பிரியா
த.வெ.க ஆட்சியமைந்த நான்கு மாதங்களில் மழைநீர் வடிகால் பணிகளை மேற்கொண்டு இதை சாதித்தார்களா? என மேயர் பிரியா கேள்வி எழுப்பியுள்ளார்.
ஊடகத்திற்கு பேட்டியளித்த மேயர் பிரியா, “மாநகராட்சியுடன் மழை குறித்த ஆய்வு கூட்டத்தை ஆகஸ்டிலேயே நடத்தியிருக்க வேண்டும். இவர்கள் அந்த ஆய்வுக் கூட்டத்தையே நான்கு நாட்களுக்கு முன்புதான் நடத்தியிருந்தனர். அதிலும் நாங்கள் மக்களின் பாதுகாப்புக்கு தேவையான அடிப்படை விஷயங்களை பேசுகையில் தவெக எம்.எல்.ஏ ‘போரடிக்குது’ என்கிறார். அவர்களின் அலட்சியமான அக்கறையற்ற போக்கு அதிலேயே வெளிப்பட்டது. அதிகாரிகளும் அமைச்சர்களும் மேயர், துணை மேயர் போன்றோரிடம் முறையாக கலந்தாலோசிப்பது இல்லை. அவர்களாக பணியை மேற்கொள்கிறார்கள். அதனால் அவர்கள் ஒரு பக்கம் பணிகளை ஆய்வு செய்து கூட்டங்களை நடத்துகின்றனர். நாங்கள் இன்னொரு பக்கம் ஆய்வு செய்து பணிகளை முடுக்கி விட்டுக் கொண்டிருக்கிறோம்.
நேற்று சென்னையில் வரலாறு காணாத அளவுக்கு மழை பெய்திருக்கிறது. ஆனால், காலையில் மக்கள் பெரிய இடையூறுகளின்றி தங்களின் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி விட்டனர். த.வெ.க ஆட்சியமைந்த நான்கு மாதங்களில் மழைநீர் வடிகால் பணிகளை மேற்கொண்டு இதை சாதித்தார்களா? திமுக ஆட்சியில் செய்த பணிகளுக்கான பலன் இப்போது கிடைத்துக் கொண்டிருக்கிறது” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.