#BREAKING கோயில்களில் பணிபுரியும் பெண் பணியாளர்களுக்கு மகப்பேறு விடுப்பு 12 மாதங்களாக உயர்வு
அரசு பெண் ஊழியர்களைப் போன்று இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் பணிபுரியும் பெண் பணியாளர்களுக்கு மகப்பேறு விடுப்பு 12 மாதங்களாக உயர்த்தி வழங்கி அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களின் வழிகாட்டுதலின்படி, மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு. சீ. ரமேஷ் அவர்களால் 2026-27 ஆம் ஆண்டிற்கான இந்து சமய அறநிலையத்துறையின் மானியக் கோரிக்கையின்போது, சட்டமன்ற பேரவையில், திருக்கோயில்களில் திருப்பணிகள் மேற்கொள்ளுதல், ஆயிரம் ஆண்டுகள் பழமையான திருக்கோயில்களில் திருப்பணி செய்தல், சிதிலமடைந்த திருக்கோயில்களை பழமை மாறாமல் புதுப்பித்தல், திருத்தேர்களை சீரமைத்தல், திருக்குளங்களை புனரமைத்தல், பக்தர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்துதல், கல்வி நிறுவனங்களை மேம்படுத்துதல், அன்னதானத் திட்டத்தை விரிவாக்கம் செய்தல் மற்றும் பணியாளர் நலன் சார்ந்த பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. இவற்றில் திருக்கோயில் பணியாளர்களின் நலனை கருத்தில் கொண்டு, அவர்கள் ஓய்வு பெறும் போது ஈட்டிய விடுப்பை ஒப்படைத்து அதற்கான பணப்பலனைப் பெறுவதற்கான உச்சவரம்பு 210 நாட்களிலிருந்து 240 நாட்களாக உயர்த்தப்படும் எனவும், திருக்கோயில்களில் பணிபுரியும் பெண் பணியாளர்களின் நலனை கருத்தில் கொண்டு, தற்போது வழங்கப்பட்டு வரும் 9 மாத மகப்பேறு விடுப்பு 12 மாதங்களாக உயர்த்தப்படும் எனவும் அறிவிப்பு எண்கள் 79 மற்றும் 80-ல் அறிவிக்கப்பட்டிருந்தது.
திருக்கோயில் பணியாளர்களின் நலன் சார்ந்த இந்த அறிவிப்புகளை செயல்படுத்தும் வகையில், இந்து சமய நிறுவனங்களின் பணியாளர் (பணி நிபந்தனைகள்) விதிகள் 2020-ல் உரிய திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன்மூலம், ஓய்வு பெறும் திருக்கோயில் பணியாளர்கள் அரசு ஊழியர்களுக்கு இணையாக தங்களது ஈட்டிய விடுப்பை அதிகபட்சமாக 240 நாட்கள் வரை ஒப்படைத்து, அதற்குரிய பணப்பலனைப் பெறும் வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும், திருக்கோயில்களில் பணிபுரியும் பெண் பணியாளர்கள் அரசு ஊழியர்களுக்கு இணையாக 12 மாத மகப்பேறு விடுப்பினைப் பெற்று பயனடைய வழிவகை செய்யப்பட்டுள்ளது. திருக்கோயில் பணியாளர்களின் பணிநலன், குடும்ப நலன் மற்றும் சமூகப் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில், ஈட்டிய விடுப்பு ஒப்படைப்புக்கான பணப்பலன் மற்றும் மகப்பேறு விடுப்பு ஆகிய இரு முக்கிய கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இதன்மூலம் திருக்கோயில் பணியாளர்கள் பெரும் பயனடைவார்கள்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.