×

கோவில்பட்டியில் பட்டாசு வெடித்ததில் ஏற்பட்ட தீப்பொறியால் எரிந்த தீப்பெட்டி ஆலை

 

கோவில்பட்டியில் பட்டாசு தீ அருகில் இருந்த தீப்பெட்டி குடோனில் விழுந்து தீ விபத்துக்குள்ளானது.


தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பல்லாக்கு சாலை முதல் தெரு பகுதியில் முத்துக்குமார் என்பவர் தீப்பெட்டி ஆலை நடத்தி வருகிறார். இன்று தீபாவளி பண்டிகை என்பதால் அப்பகுதியில்  சிலர் பட்டாசுகள் வெடித்துள்ளனர். அப்போது பட்டாசு வெடிக்கும் போது வெடித்து சிதறிய போது தீப்பெட்டி ஆலையின் பின்புறம் உள்ள குடோன் பகுதியில் விழுந்துள்ளது. இதனால் அங்கு வைக்கப்பட்டிருந்த தீ குச்சியில் தீப்பிடித்து பற்றி எரிந்துள்ளது.

இதனைப் பார்த்த அருகில் இருந்த பொதுமக்கள் கோவில்பட்டி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் குடோனில் இருந்த தீ மருந்து குச்சிகள்  எரிந்து சேதமடைந்தது. இந்த விபத்து குறித்து கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தீ விபத்தினால் எழுந்த புகையினால் அப்பகுதி புகை சூழ்ந்து காணப்பட்டது.