அரசியல் மேடையா? திருமண மேடையா? விசிக பொதுக்கூட்டத்தில் நடந்த திடீர் திருமணம்
காட்டுமன்னார்கோவில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், காட்டுமன்னார்கோவிலில் நடைபெற்ற விசிக பொதுக்கூட்டம் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க சுவாரஸ்ய நிகழ்வுக்கு சாட்சியாக மாறியுள்ளது.
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் தனித் தொகுதியில் போட்டியிடும் திமுக கூட்டணி வேட்பாளர் ஜோதிமணியை ஆதரித்து பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் மற்றும் விசிக தலைவர் தொல். திருமாவளவன் ஆகியோர் பங்கேற்று உரையாற்றினர். இரவு நேரம், அனல் பறக்கும் அரசியல் பேச்சுகள் என மேடை பரபரப்பாக இருந்த வேளையில், நடுத்திட்டு கிராமத்தைச் சேர்ந்த சங்கர் என்றவர் தனது துணையுடன் திடீரென மேடையேறி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். "தங்கள் முன்னிலையில் தான் எங்கள் திருமணம் நடைபெற வேண்டும்" என அவர் வேண்டியது மேடையிலிருந்த தலைவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் உள்ள சமயம் நேரமில்லை என்பதால் உடனடியாக தலைவர் திருமாவளவன், மற்றும் அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் இருவரும் புன்னகையுடன் தாலியை எடுத்துக் கொடுத்து அந்தத் திருமணத்தை முன்னின்று நடத்தி வைத்தார்கள். தொண்டர்களின் கரவொலிக்கும், உற்சாக முழக்கத்திற்கும் இடையே மணமகன் சங்கர், மணமகளின் கழுத்தில் தாலி கட்டினார். அரசியல் பரப்புரை மேடை, ஒரு நொடியில் மங்கலமான திருமண மேடையாக மாறிய இந்த அரிய நிகழ்வு அங்கு கூடியிருந்த பொதுமக்களிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.