“வாழைப்பழத்தை திருடி சாப்பிட்டு தான் நான் படித்தேன்”- மாரி செல்வராஜ்
பள்ளிகள் எங்களுடையது என்றவர்களை பள்ளிகளில் இருந்து வெளியேற்றி பெரும் சமூக நீதி பாய்ச்சலை தமிழ்நாடு அரசு ஏற்படுத்தி இருக்கிறது என இயக்குநர் மாரி செல்வராஜ் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி பங்கேற்ற ‘கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் கோலாகலமாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றிய இயக்குநர் மாரி செல்வராஜ், “பசியால் என்னுடன் படித்த நிறைய பேர் படிப்பை நிறுத்திவிட்டார்கள். பள்ளி பருவத்தில் பசி கொடுமையால் வாழை தோட்டத்திற்குள் புகுந்து பழங்களை திருடி சாப்பிடுவோம், அதையே வாழை படத்திலும் வைத்தேன். ஆகவே காலை உணவு திட்டம் வந்தவுடன் நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. காலை உணவு திட்டம் என்பது எனக்கு மிகவும் நெருக்கமான திட்டம்.
படிப்பை தொடரமுடியாம போன அதனை பேருக்கும் அழுகையாயிருக்கும். பள்ளிகள் எங்களுடையது என்றவர்களை பள்ளிகளில் இருந்து வெளியேற்றி பெரும் சமூக நீதி பாய்ச்சலை தமிழ்நாடு அரசு ஏற்படுத்தி இருக்கிறது. பள்ளிகளில் நடக்கும் யுத்தத்தை, அறிவு யுத்தமாக மாற்றிய கல்வித்துறைக்கு ரொம்ப நன்றி. பள்ளிகளுக்குள் சமூக நீதி, சமத்துவம் என்கிற வார்த்தையை ஓங்கி ஒலிக்க வைக்கக்கூடிய செயலை தமிழ்நாடு அரசு தொடர்ந்து செய்து வருவது மிகப் பெரிய சந்தோஷமாக இருக்கிறது” என பேசினார்.