"சிகரத்தை நோக்கிச் சென்றுகொண்டிருந்தவனை மரணத்தின் பள்ளத்தாக்கு விழுங்கிவிட்டது"... வைரமுத்து
சன் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் மெகா தொடர் எதிர்நீச்சல். இத்தொடரை திருசெல்வம் இயக்கி வரும் நிலையில், பெண்களுக்கு எதிரான அடக்குமுறையையும், அதை அவர்கள் எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதையும் காண்பிப்பது போல இந்த எதிர்நீச்சல் தொடர் அமைந்துள்ளது. இந்த மெகா தொடரில் ஆதி குணசேகரன் என்ற கதாபாத்திரத்தில் நடிகர் நடிகரும், இயக்குனருமான மாரிமுத்து நடித்து வருகிறார்.
இந்நிலையில் நடிகரும் , இயக்குனருமான மாரிமுத்து இன்று காலை 8.30 மணிக்கு மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். டப்பிங் பேசிக் கொண்டிருந்தபோது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. மாரிமுத்து மறைவு திரையுலகினர் மட்டுமல்லாமல் அவரது ரசிகர்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தம்பி மாரிமுத்துவின்
மரணச் செய்தி கேட்டு
என் உடம்பு ஒருகணம்
ஆடி அடங்கியது
சிகரத்தை நோக்கிச்
சென்றுகொண்டிருந்தவனை
மரணத்தின் பள்ளத்தாக்கு
விழுங்கிவிட்டது
என் கவிதைகளின்
உயிருள்ள ஒலிப்பேழை அவன்
என் உதவியாளராய் இருந்து
நான் சொல்லச் சொல்ல எழுதியவன்
தேனியில் நான்தான்
திருமணம் செய்துவைத்தேன்
இன்று அவன்மீது
இறுதிப் பூக்கள் விழுவதுகண்டு
இதயம் உடைகிறேன்
குடும்பத்துக்கும்
கலை அன்பர்களுக்கும்
கண்ணீரைத் துடைத்துக்கொண்டே
ஆறுதல் சொல்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.