இளையராஜா இசையமைத்த 'கோந்தல்' ஆஸ்கருக்கு தேர்வு
99-வது ஆஸ்கர் விருதுகளின் சிறந்த சர்வதேசத் திரைப்படப் பிரிவுக்கான இந்தியாவின் அதிகாரப்பூர்வத் தேர்வாக, சந்தோஷ் தேவகார் எழுத்து மற்றும் இயக்கத்தில் உருவான மராத்தி த்ரில்லர் திரைப்படமான 'கோந்தல்' (Gondhal) தேர்வு செய்யப்பட்டு ஃபிலிம் ஃபெடரேஷன் ஆஃப் இந்தியா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
பிரபல இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ள இத்திரைப்படம், கிராமப்புற மகாராஷ்டிராவின் பாரம்பரிய இரவுக் சடங்கான 'கோந்தல்' கலை நிகழ்வின் பின்னணியில், தவறான திருமண வாழ்க்கையில் சிக்கித் தவிக்கும் சுமன் என்ற பெண் தன் காதலனுடன் தப்பிக்கத் திட்டமிடும் போது நடக்கும் கொலை, துரோகம் மற்றும் உயிர் பிழைப்பதற்கானப் போராட்டத்தை மையமாகக் கொண்டு விறுவிறுப்பான த்ரில்லராக வடிவமைக்கப்பட்டுள்ளது. 33 திரைப்படங்கள் போட்டியிட்ட இந்தப் பட்டியலில் இருந்து ஈஷிதா தேஷ்முக், கிஷோர் கதம், யோகேஷ் சோஹோனி மற்றும் நிஷாத் போயிர் ஆகியோர் முதன்மைப் பாத்திரங்களில் நடித்துள்ள இத்திரைப்படம் தேர்வு செய்யப்பட்டுள்ளதுடன், 'ஸ்வாஸ்', 'ஹரிஸ்சந்திராச்சி ஃபேக்டரி' மற்றும் 'கோர்ட்' ஆகிய படங்களைத் தொடர்ந்து ஆஸ்கர் போட்டிக்குத் தேர்வாகும் 4-வது மராத்தி படம் என்ற பெருமையையும் பெற்றுள்ளது.