வேட்பாளராக 10 கோடி வரை பேரம், பெண்களுக்கு பாலியல் தொல்லை... தவெகவில் பரபரப்பு
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட விரும்புவோரிடம் 10 கோடி வரை பேரம் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளில் ஈடுபட்டு வரும் அருள்ராஜ் என்பவருக்கு மாவட்ட பொறுப்பாளர் பதவி கொடுக்க கூடாது என அப்பகுதியைச் சேர்ந்த சக நிர்வாகிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
தமிழக வெற்றிக் கழகம் சார்பில் இதுவரை 120 கழக மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இதில் , சென்னை, திருச்சி, தென்காசி, மதுரை உள்ளிட்ட 4 மாவட்டங்களில், ஒரு சில மாவட்டங்களுக்கு பொறுப்புகள் அறிவிக்கப்படாமல் இருந்தது. இதில் மிக முக்கியமாக தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரு பொறுப்பாளர்களை கூட இதுவரை தவெக நியமிக்கவில்லை. இந்த நிலையில் இன்று தூத்துக்குடி மற்றும் திருச்சியில் விடுபட்ட கழக மாவட்டத்திற்கு விஜய் பொறுப்புகளை அறிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
திருச்சியில் ஏற்கனவே 5 கழக மாவட்டங்களாக பிரிக்கப்பட்டு பொறுப்புகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், திருச்சி கிழக்கு, மணப்பாறை, திருவெறும்பூர் ஆகிய மூன்று தொகுதிகளுக்கு இன்று பொறுப்புகள் அறிவிக்கப்படுவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் திருவெறும்பூர் தொகுதியில் அருள்ராஜ் என்பவருக்கு மாவட்ட பொறுப்பாளர் பதவி வழங்கப்பட உள்ளதாகவும், தரமற்ற அவரது செயல்பாடுகளைக் கண்டித்து அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியைச் சேர்ந்த தவெக நிர்வாகிகள் பலமுறை கட்சியின் பொதுச் செயலாளர் என் ஆனந்திடம் முறையிட்டும் எந்த பலனும் கிடைக்கவில்லை என குற்றம் சாட்டியுள்ளனர்.
திருவெறும்பூர் தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட விரும்புவரிடம் 10 கோடி வரை பேரம் பேசுவது, கட்சியில் இணையும் புதிய பெண்களை அச்சுறுத்தும் (பாலியல் ரீதியாக) வகையில் நடந்து கொள்வது, கடந்த மார்ச் மாதத்தில் கொலை குற்றத்தில் ஈடுபட்ட பாரதிராஜா என்பவருக்கு தொகுதி பூத் கமிட்டி ஒருங்கிணைப்பாளர் மற்றும் தொகுதி உறுப்பினர் சேர்க்கை ஒருங்கிணைப்பாளர் என்ற இரு பதவிகள் வழங்கியது உள்ளிட்ட பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டுள்ளதால் இவரை கட்சியிலிருந்து நீக்க சக நிர்வாகிகள் வலியுறுத்தியுள்ளனர். எங்களது கோரிக்கையும் மீறி இவருக்கு பதவி வழங்கப்பட்டால் போராட்டத்தில் ஈடுபடுவோம் என தகவல் வாயிலாக தெரிவித்துள்ளனர். மேலும் திருச்சி திருவெறும்பூரில் கடந்த 40 ஆண்டுகளாக குன்றத்திலிருந்து பணியாற்றி வரக்கூடிய குடமுருட்டி கரிகாலன் அவருக்கு மாவட்ட பொறுப்பு வழங்காமல் பொதுச்செயலாளர் என்.ஆனந்த் தனிப்பட்ட வன்மத்தோடு செயல்படுவதாக குற்றம் சாட்டியுள்ளனர்.