"அதிமுக பாஜகவின் கிளைக் கழகமாகிவிட்டது... குடும்பத்தை காப்பாற்ற”- மனோஜ் பாண்டியன் பரபரப்பு பேட்டி
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்களில் ஒருவரான மனோஜ் பாண்டியன், இன்று தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் திராவிட முன்னேற்றக் கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டார்.
திமுகவில் இணைந்த பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த மனோஜ் பாண்டியன், “எம்ஜிஆர் இருந்த காலத்தில் இருந்த அண்ணா திமுக இல்லை. இது வேறு ஒரு இயக்கத்தை நம்பி, அந்த இயக்கத்தின் சொல்படிதான் நடக்கக்கூடிய ஒரு துர்பாக்கியமான சூழ்நிலையில் இருக்கின்றது. எந்த விதிகளை நிறுவனத் தலைவர் உருவாக்கினாரோ அதை காற்றில் பறக்கவிட்டு, இந்த இயக்கம் பாரதிய ஜனதா கட்சியினுடைய கிளைக் கழகமாக இங்கே செயல்படக்கூடிய சூழ்நிலையில் உள்ளது” என்றார். திராவிடக் கொள்கைகளைப் பாதுகாக்கக்கூடிய இயக்கம் திமுக என்பதை உணர்ந்து தான் இந்த முடிவை எடுத்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஓ.பன்னீர்செல்வம், சசிகலா மற்றும் டி.டி.வி. தினகரன் ஆகியோரைச் சந்திப்பது குறித்த கேள்விக்குப் பதிலளித்த மனோஜ் பாண்டியன், "என்னை பொறுத்தவரையில் சில நெருடல்கள் உண்டுதான். காரணம், நான் எடுத்திருக்கின்ற நிலைப்பாடு என்பது உறுதியான நிலைப்பாடாகத்தான் இருக்க வேண்டும்" என்று தெரிவித்தார். திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டது குறித்து மனோஜ் பாண்டியன் கூறுகையில், "ஒரு இயக்கத்திற்கு உழைக்கக்கூடிய அந்த உழைப்பை அங்கீகரித்து அங்கீகாரம் தராமல், அந்த உழைப்பு வேண்டாம் என்று ஒவ்வொரு தொண்டரையும் விரட்டக்கூடிய இன்றைய எடப்பாடி பழனிச்சாமியினுடைய நோக்கம் என்ன என்பதை உணர்ந்து நான் எடுத்திருக்கின்ற முயற்சிக்கு, இங்கே வந்தபோது முதலமைச்சர் என்னை இருகரம் வரவேற்று, நீங்கள் வாருங்கள் இந்த இயக்கத்திற்கு என்று மகிழ்ச்சியாக என்னை இந்த இயக்கத்திற்கு வரவேற்றி இருக்கின்றார். பாரதிய ஜனதா கட்சியுடன் எந்த சூழ்நிலையிலும் கூட்டணி வைக்க மாட்டேன் என்று சொல்லிவிட்டு, எந்த அடிப்படையில் மீண்டும் கூட்டணி வைத்தார் என்பதற்கு இன்றுவரை பதில் இல்லை. தன்னையும் தன்னுடைய குடும்பத்தையும் காப்பாற்றுவதற்காக அண்ணா திமுக என்ற இயக்கத்தை அடகு வைத்து அங்கே இருப்பதை விட, திராவிட கொள்கையை பாதுகாக்கக்கூடிய ஒரு தலைவரோடு இங்கே தொண்டனாக பணியாற்ற வந்திருக்கின்றேன்" என்று குறிப்பிட்டார்.