×

”ராஜேந்திர பாலாஜி ஆடிய ஆட்டத்திற்கும், அதிகாரத்தில் செய்த அவலத்துக்கும் இப்போது அனுபவிக்கிறார்”

 

வருகிற 12-ம் தேதி மதுரை வரை உள்ள பாரத பிரதமர் மோடி மதுரை மக்களுக்கு பொங்கல் பரிசாக மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக அறிவிக்க வேண்டும் என விருதுநகர் எம்.பி. மாணிக்கம் தாகூர் கோரிக்கை விடுத்துள்ளார்.

விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் மதுரை திருநகரில் உள்ள அவரது அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,  “மதுரைக்கு பிரதமர் மோடி வருகை தருவதை ஒட்டி மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்ற வேண்டும் என்பது குறித்து அவருக்கு கடிதம் ஒன்றை எழுதி இருந்தேன். அக்கடிதத்தில் விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா ஏற்கனவே அனுப்பிய பதில் கடிதத்தையும் அந்த கடிதத்தோடு இணைத்து அனுப்பியுள்ளேன். எனவே கேபினெட் அமைச்சர்கள் அழைத்து மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்றுவதற்கு முடிவு எடுத்து வருகின்ற 12ஆம் தேதி மதுரைக்கு பிரதமர் வருகையில் பொங்கல் பரிசாக மதுரை மக்களுக்கு அதனை வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளேன்.

விஜயதசமி, தீபாவளி போன்ற விழாக்கள் உடன் மோடியின் பெயரை இணைத்து கொண்டாடுவார்களா? அப்படியிருக்கையில் தமிழர்கள் மட்டும் மோடி பொங்கல் என கொண்டாட வேண்டுமா? தை மாதத்தில் கொண்டாட வேண்டிய பொங்கலை மார்கழி மாதத்தில் கொண்டாடுவது போன்று காமெடி எதுவும் இல்லை. விளம்பரத்திற்காக இதை செய்கிறார்களா என்பது தெரியவில்லை. தைப்பொங்கலை மார்கழியில் நடத்திவிட்டு அதற்குப் பெயர் மோடி பொங்கல் என்று கூறுவது மிக வருத்தமான செயல்.

தமிழகத்தை மாற்றான் தாய் பிள்ளையாக வெள்ள நிவாரணத்தில் பார்க்காமல்  குஜராத்திற்கு கொடுக்கப்படும் முக்கியத்துவத்தை போல தமிழகத்திற்கும் கொடுக்க வேண்டும் என திமுக கூட்டணி கட்சி நாடாளுமன்ற தலைவர் T.R. பாலு மற்றும் பாராளு மன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்துள்ளோம். ராஜேந்திர பாலாஜியை பொருத்தவரை அவர் ஆடிய ஆட்டத்திற்கும், அதிகார போதையில் செய்த அலங்கோலங்களுக்கும் தற்போது அனுபவித்துவருகிறார். தமிழக காவல்துறை அவரை தேடி பிடித்து சட்டத்திற்கு முன்பாக நிறுத்தம் என்று எனக்கு நம்பிக்கை உள்ளது” எனக் கூறினார்.