“பாஜகவுடன் கூட்டணி ஆபத்தில் முடியும் என சொன்னதை டிடிவி கேட்கவில்லை”- மாணிக்கராஜா
சென்னை தேனாம்பேட்டை அண்ணா அறிவாலயத்தில், தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு க ஸ்டாலின் முன்னிலையில் அமமுக துணைப் பொதுச் செயலாளரும், அமமுகவின் தென்மண்டல பொறுப்பாளராகவும் இருந்த கடம்பூர் SVSP. மாணிக்கராஜா, அமமுக மாவட்டச் செயலாளர்கள் தென்காசி வடக்கு ராமச்சந்திர மூர்த்தி என்ற வினோத், ஸ்டெல்லஸ் கன்னியாகுமரி மேற்கு, ரத்னராஜ் கன்னியாகுமரி மத்திய மாவட்டம் ஆகியோர் திமுகவில் இணைந்தனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய கடம்பூர் மாணிக்கராஜா, “அமமுக எதற்காக தொடங்கபட்டது என்பது அனைவரும் தெரிந்தது. 8 ஆண்டுகாலம் அனைவரும் உழைத்து வளர்த்த அமமுகவில் டிடிவி தினகரன் இன்று பழைய நிலைப்பாட்டையே எடுத்து உள்ளார். அர்த்தமே இல்லாத முடிவை டிடிவி எடுத்த காரணத்தால் தொண்டர்கள், மாவட்ட செயலாளர்கள் விருப்பபடி திமுகவில் இணைந்து உள்ளேன். அமமுக என்டிஏ கூட்டணியில் சேர்ந்தற்கு என்ன அழுத்தங்கள் உள்ளது என்பது எங்களுக்கு தெரியாது. இது நமக்கு ஆபத்தில் முடியும் என தொண்டர்கள் கூறியும் டிடிவி தொண்டர்களின் பேச்சை கேட்கவில்லை. டெல்லியில் இருந்து அவருக்கு அழுத்தம் அளிக்கப்பட்டதா என்பது பற்றி எங்களுக்கு தெரியவில்லை.
அதிமுக அமமுக இணைந்து களத்தில் பணியாற்ற முடியாது. தேசிய ஜனநாயக கூட்டணியில் அமமுக இணைவதை தொண்டர்கள் விரும்பவில்லை. வரும் சட்டமன்ற அதிமுக, அமமுக இருவரும் இணைந்து பணியாற்ற வாய்ப்பே இல்லை. அதிமுகவை அமமுகவும், அமமுகவை அதிமுகவும் மாறி மாறி கவிழ்த்து விடுவார்கள் எந்த நிபந்தனையும் இல்லாமல் திமுகவில் இணைந்துள்ளேன்.