"அடிச்சா திருப்பி அடிப்போம்!" – திமுக அமைச்சர்களுக்கு ஓப்பனாக வார்னிங் கொடுத்த மாணிக்கம் தாகூர்!
சென்னை ராயப்பேட்டையில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில தலைவராக மாணிக்கம் தாகூர் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மேலிட பொறுப்பாளர் கிரிஸ் சோடங்கர், முன்னாள் மாநில தலைவர்கள் செல்வப் பெருந்தகை, தங்கபாலு, கிருஷ்ணசாமி, திருநாவுக்கரசு, கே.எஸ்.அழகிரி, காங்கிரஸ் அமைச்சர்கள் விஸ்வநாதன் மற்றும் ராஜேஷ்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
பதவியேற்பு விழாவுக்காக சத்தியமூர்த்தி பவன் வளாகத்தில் காமராஜர், ராகுல் காந்தி, காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே புகைப்படத்தோடு பிரம்மாண்ட மேடை அமைக்கப்பட்டிருந்தது.
நிகழ்ச்சியில் பேசிய தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேஷ்குமார், "கட்சியைப் பற்றி முழுமையாக தெரிந்த ஒரு நபரை தான் காங்கிரஸ் மேலிடம் தலைவராக நியமனம் செய்துள்ளது. முன்னாள் தலைவர் செல்வப்பெருந்தகை சிறப்பான முறையில் தன்னுடைய தலைவர் பதவியை நிறைவு செய்துள்ளார். கட்சித் தொண்டர்களின் கண்ணீருக்கு அடையாளமாக 59 ஆண்டுகளுக்கு பிறகு காங்கிரஸ் கட்சி தமிழக அமைச்சரவையில் பங்கேற்றுள்ளது" என்றார்.
நிகழ்ச்சியில் பேசிய முன்னாள் தலைவர் செல்வப்பெருந்தகை, "கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு நான் எப்படி மகிழ்ச்சியாக மாநில தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டேனோ, அதைவிட இருமடங்கு மகிழ்ச்சியாக மாணிக்கம் தாகூர் அந்த பொறுப்பை ஏற்கும்போது எனக்கு மனநிறைவாக உள்ளது. மாநிலத் தலைவராக பொறுப்பேற்று இரண்டு வருடங்களாக எனக்கு துணை நின்ற நிர்வாகிகளுக்கு அனைவருக்கும் நன்றி" என கூறினார்.
நிகழ்ச்சியில் பேசிய தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் மாணிக்கம் தாகூர், "141 ஆண்டு கால வரலாறு கொண்ட கட்சி காங்கிரஸ் கட்சி. அத்தகைய வரலாற்று பின்னணி கொண்ட கட்சியின் தலைவராக பொறுப்பேற்பதில் மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது. இதுவரை தலைவர் பொறுப்பில் பணியாற்றி வந்த செல்வப்பெருந்தகை செய்த செயல்கள் அனைவருக்கும் தெரியும். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சொத்துக்களை மீட்டெடுத்த பெருமை அவரையே சாரும்.
சட்டமன்ற தேர்தல் நாடாளுமன்றத் தேர்தல் உள்ளிட்டவை நமக்கு நல்லதொரு பாடத்தை கற்று கொடுத்துள்ளது. அனைத்து பாடங்களையும் ஏற்றுக் கொண்டு, அடுத்து நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் நாம் சிறப்பாக செயல்பட வேண்டும்.
மாநிலத் தலைவர் பதவி என்பது ஒரு தொடர் ஓட்டப்பந்தயம். எந்த ஒரு தலைவர்களின் மதிப்பையும் நான் குறைத்து மதிப்பிட முடியாது. மத்தியில் ஆட்சியில் இல்லாத போதும், அவர்களின் கடின உழைப்பால்தான் தற்பொழுது காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சிலர் அமைச்சர்களாக அரசில் இடம்பெற முடிந்துள்ளது.
பல குறைபாடுகள் என்னிடம் இருக்கலாம், அனைத்தும் சரியாக இருக்கும் என்று நான் கூறவில்லை. நான் பார்க்கிற பார்வை வேறாக இருக்கலாம். என்னை பொருத்தவரை காங்கிரஸ் கட்சியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல முயற்சிக்கிறேன். காங்கிரஸ் கட்சி அடுத்த இடத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்றால் அனைவரும் தங்களுடைய ஈகோவை விட்டுவிட்டு பணிகளை செய்ய வேண்டும்.
திமுகவிற்கும், எங்களுக்கும் வாய்க்கா வரப்பு சண்டையா? ஆர்.எஸ்.பாரதி, இளங்கோவன், அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோருக்கும் எனக்கும் எந்த ஒரு பிரச்சனையும் இல்லை. யாராக இருந்தாலும் காங்கிரஸ் கட்சியை அடித்தால், நான் திருப்பி அடிப்பேன். நாங்கள் யார் குடும்பத்தையும் கெடுக்க விரும்பவில்லை. எங்களுடைய வேலைகளை நான் பார்த்துக் கொண்டு செல்வோம்.
ராகுல் காந்தி ஒழிக என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்த பிறகு தான், அவருக்கு எதிராக நான் கருத்து தெரிவித்தேன். அதற்கு முன்பாக எந்த ஒரு கருத்தையும் அவரைப் பற்றி நான் பேசவில்லை. திமுக மாவட்ட செயலாளர்கள் மற்றும் அமைச்சர்கள் யாரைப் பற்றி நான் எதுவும் பேசவில்லை. காங்கிரசை தொட்டால் அது யாராக இருந்தாலும் திருப்பி அடிப்போம்.
ராகுல் காந்தி பிரதமராக வேண்டும் என்பதுதான் எங்களுடைய லட்சியம். அதைப் பற்றி யாரேனும் விமர்சித்தால் அவர்களை விடமாட்டோம். தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் தலைமையில் ஒரு நல்லாட்சி தமிழகத்தில் நடைபெற்று வருகிறது. அவருடைய ஆட்சியில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இருவர் அமைச்சராக இடம் பெற்றுள்ளோம். இரு அமைச்சர்களும் உழைப்பால் வந்தவர்கள். அவர்களுடைய பெற்றோர்கள் பெரிய அரசியல்வாதிகள் கிடையாது.
காங்கிரஸ் கட்சியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்றால் காங்கிரஸ் கட்சி கூட்டணியில் இருக்கும்போதே அதனை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். தமிழக மக்கள் 60% மேல் ராகுல் காந்தி தான் பிரதமராக வரவேண்டும் என விரும்புகிறார்கள். ஆனால் ஏன் அவர்கள் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்க மாறுக்கிறார்கள் என்பது தான் கேள்வியாக உள்ளது. இனிவரும் காலங்களில் தேர்தலுக்கு பணம் கொடுத்து வெற்றி பெற முடியாது. கடந்த சட்டப்பேரவை தேர்தலில் மக்கள் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளனர்.
2026-இல் கூட்டணி ஆட்சி வரவேண்டும் என நினைத்தோம், தற்போது வந்துவிட்டது. நம்முடைய அடுத்த பணி 2029-இல் ராகுல் காந்தி பிரதமராக வேண்டும். ராகுல் காந்தி பிரதமரானால் தமிழகத்தின் முக்கிய ஐந்து பிரச்சனைகள் இருக்காது. நீட் தேர்வு இருக்காது, நீர் உரிமைகள் காக்கப்படும். மீனவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும். தமிழ்நாட்டுக்கு வரப்படும் நிதிகள் அனைத்தும் சரியாக வழங்கப்படும். அதற்கு நாடாளுமன்றத் தேர்தலில் 40-க்கு 40 இடங்கள் வெற்றி பெற வேண்டும். அதுதான் நம்முடைய நோக்கமாக இருக்க வேண்டும்.
தமிழக வெற்றிக் கழகத்தின் கூட்டணி மரியாதையான கூட்டணி. அந்த மரியாதையை நாம் கெடுத்துக் கொள்ளக் கூடாது. ஊரில் மரியாதையாக இருப்பவர்கள் தான் காங்கிரஸ் காரர்களாக இருப்பார்கள். அடுத்த பொருட்களுக்கு ஆசைப்படாதவர்கள் தான் காங்கிரஸ்காரர்கள். நம் யாரும் எதையும் எடுத்துக்கொண்டு செல்ல விரும்பவில்லை. மக்களுக்காக உழைக்க தயாராக உள்ளோம். வரும் நாடாளுமன்ற தேர்தலில் வென்று ராகுலை பிரதமராக்க வேண்டும் என்பதே நம்முடைய லட்சியமாக இருக்க வேண்டும்" என்றார்.