×

வேளாண் சட்டங்களை மோடி திடீரென ரத்து செய்ததற்கு இதுதான் காரணம்!

 

வருகிற நாடாளுமன்ற கூட்டத் தொடரில் அவசர சட்டமாக கொண்டு வந்து வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சாலைப் பாதுகாப்புக்குழு கூட்டம் இன்று (19-11-21)மாலை நடைப்பெற்றது.இக்கூட்டத்தில் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் மேகநாதரெட்டி,விருதுநகர்  சட்டமன்ற உறுப்பினர்ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன் விருதுநகர்  மாவட்ட காவல்கண்காணிப்பாளர் மனோகர், வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர், “வேளாண் சட்டங்களை திரும்பப்பெற்றது மோடியின் ஆணவ ஆட்சிக்கு கிடைத்த சரியான அடி. விவசாயிகள் தொடர்ந்து காந்திய வழியில் நடத்திய போராட்டத்தினாலும் எதிர்க்கட்சிகள்  நடத்திய தொடர் போராட்டத்தினாலும், ராகுல்காந்தியுடைய தொடர் போராட்டத்தினாலும், தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் நடத்திய தொடர் போராட்டத்தினாலும் இந்த வெற்றி என்பது கிடைத்து இருக்கிறது. இது விவசாயிகள் உடைய வெற்றி. இதனை வெறும் அறிவிப்பாக மட்டுமல்லாமல் அவசர சட்டமாக கொண்டுவர வேண்டும்.

வருகின்ற நாடாளுமன்ற கூட்டத்தொடரில் இதை அவசர சட்டமாக கொண்டு வந்து திரும்பப் பெறுவார்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. இவர்களைப் பொறுத்த மட்டிலும் இதனைச் செய்வதற்கு ஒரு முக்கியமான காரணம் உத்தரப் பிரதேசத் தேர்தல், பஞ்சாப் தேர்தலிலே விவசாயிகளுடைய பிரச்சனை மிகப்பெரிய பிரச்சனையாக வந்து விட்டதால் அதை தேர்தலுக்கான எடுத்த முடிவாக பார்க்கிறோம்.

மோடி விவசாயிகளிடம் மன்னிப்பு கேட்டிருக்கிறார். அது போல பணமதிப்பிழப்பு கொண்டு வந்ததற்கு மன்னிப்பு கேட்க வேண்டும். ஜி.எஸ்.டி.கொண்டு வந்ததற்கு சிறு குறு விவசாயிகளிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். கொரோனா காலத்தில் கோடிக்கணக்கான மக்களின் வாழ்வாதாரத்தை கெடுத்தும் லட்சக்கணக்கான பெண்களை விதவையாக்கியதற்காகவும்  மன்னிப்பு கேட்க வேண்டும்” எனக் கூறினார்.