"தமிழ்நாட்டுக்கே அவமானம்; அறிவியல் பூர்வமான ஊழல் 2.0"- மாணிக்கம் தாகூர்
தமிழகத்தில் போதை, துப்பாக்கிக் கலாச்சாரம் நீண்டகாலமாக உள்ளது. குற்றமே நடக்காத சமூகம் ஃபின்லாந்தில் வேண்டுமானால் உருவாகலாம். போலீஸாரை சுதந்திரமாகச் செயல்பட அனுமதிக்க வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் கூறியுள்ளார்.
விருதுநகரில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர், "தமிழகத்தில் போதை, துப்பாக்கிக் கலாச்சாரம் நீண்டகாலமாக உள்ளது. குற்றமே நடக்காத சமூகம் ஃபின்லாந்தில் வேண்டுமானால் உருவாகலாம். போலீஸாரை சுதந்திரமாகச் செயல்பட அனுமதிக்க வேண்டும். இதுவரை எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் நூலகத் துறையில் இது போன்ற 'அறிவியல் பூர்வமான ஊழல் 2.0' நடந்திருப்பது பெரும் அதிர்ச்சியை தருகிறது. இந்தியாவில் அதிக அளவிலான நூலகங்கள் உள்ள மாநிலமாக தமிழகம் திகழ்கிறது எனவும் ஆனால் கடந்த 2023 ஆம் ஆண்டுக்குப் பின்னர் கடந்த முறைகேடுகள் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த நூலகத்துறை ஊழல் என்பது தமிழகத்திற்கு மிகப்பெரிய அவமானத்தை ஏற்படுத்தி தந்திருக்கிறது.
கடந்த அரசு லஞ்சம், ஊழல் அரசாக நடந்ததன் விளைவாக தமிழ்நாட்டுக்கு அவமானம் ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் நடந்த நூலக ஊழல்போல் எந்த மாநிலத்திலும் நடந்ததாக தெரியவில்லை அனைத்து இடங்களிலும் ஊழல் செய்யலாம் என சாதாரணமாக மாறிவிட்டது; தமிழகத்தில் ஒவ்வொரு நூலகத்தில் உள்ள நூல்கள் பற்றிய தகவலை அரசு சரி பார்க்க வேண்டும். திமுக ஆட்சியில் போலீஸ் உண்மையிலேயே சுதந்திரமாக இருந்ததா? ஸ்டாலின் மனசாட்சிக்கு விரோதமில்லாமல் திரும்பிப் பார்க்க வேண்டும். சட்டம் - ஒழுங்கை பாதுகாக்க போலீசுக்கு முழு அதிகாரம் தவெக அரசு வழங்கியுள்ளது" என்றார்.