×

“தேர்தலுக்கு பிறகு பாஜக எதிர்ப்பில் திமுக சைலண்ட் ஆகி விட்டது”- மாணிக்கம் தாகூர்

 

மோடி அரசுக்கு எதிராக ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என அனைவரும் பேச வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் வலியுறுத்தியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய  தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர், “தேர்தலுக்கு பிறகு பாஜக எதிர்ப்பில் திமுக சைலண்ட் ஆகி விட்டனர். தமிழகத்திற்கு மத்திய அரசு இழைக்கும் அநியாயங்கள் குறித்து பேசவில்லை எனவும் பாஜகவை தவெக அரசும் கண்டிக்க வேண்டும். நான் கோவிலுக்கு செல்வேன். இதையெல்லாம் மதவாதம் என்று சொல்லிவிடமுடியாது, இன்னொரு மதத்திற்கு எதிரானது கிடையாது. நயினார் நாகேந்திரன் பேசுவது தான் மதவாதம். வன்மமாய் பார்க்கிற பார்வை நயினார் நாகேந்திரனுக்கு இருக்கிறது. இந்த வன்மம் தான் தமிழ்நாட்டில் அவரை மதவாதியாக காட்டுகிறது. கடவுளை நம்புவது எந்த ஒரு பிரச்சினையும் கிடையாது, ஆனால் இன்னொருவர் நம்பிக்கையை, மதத்தை குறித்து பிரச்சினை செய்யக்கூடாது.

தமிழ்நாடு அரசியலில், மோடிக்கு எதிராக அனைவரும் திடீரென சைலண்டாக இருக்கிறார்கள். துணை மாப்பிள்ளையான எதிர்கட்சி தலைவர் அமைதியாக இருக்கிறார். மத்திய அரசு செய்யும் அநியாயங்களை சொல்லவேண்டியது காங்கிரஸின் கடமை. நாங்கள் யாருக்காகவும் பயப்படவில்லை, சைலண்டாகவும் இல்லை. முதலில் பேசிக் கொண்டிருந்தவர்களே பேசவில்லை. ஆளும் தவெக கட்சியும் இது குறித்து பேச வேண்டும். ஒவ்வொரு MLA, MPக்கும் ராஜினாமா செய்ய உரிமை இருக்கிறது, எல்லா ராஜினாமாவும் குதிரை பேரமல்ல. திமுகவுக்கு இடைத்தேர்தல் சவாலாக இருக்கும் என்பதால், அவர்கள் கலக்கமடைந்துள்ளனர், இடைத்தேர்தல் முடிவுகள் தமிழக மக்களின் மனநிலையை வெளிப்படுத்தும்” என்றார்.