×

முதலில் அண்ணாமலை பஞ்சாயத்து தலைவராகட்டும்- மாணிக்கம் தாகூர் எம்பி

 

பாஜக தலைவர் அண்ணாமலை முதலில் பஞ்சாயத்து தேர்தலில் நின்று வெற்றி பெற்று தலைவர் ஆன பிறகு, நான் தலைவர் என்று சொல்லட்டும் என விருதுநகர் எம்பி மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார். 

மதுரை மாவட்டம் திருமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், மகளிர் தின விழாவினை ஒட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில் விருதுநகர் எம்பி மாணிக்கம் தாகூர் கலந்துகொண்டார். 

அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய மாணிக்கம் தாகூர் எம்பி, “பாஜக தலைவர் அண்ணாமலை முதலில் பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறட்டும் , அதன் பின்பு பஞ்சாயத்து தலைவர் என்று சொல்லட்டும் , இதனிடையே நான்தான் தலைவர், நான் தான் தலைவர் எனக் கூறுவது வேடிக்கையாக உள்ளது.  மேலும் அரவக்குறிச்சி தேர்தலில் போட்டியிட்ட அண்ணாமலை , அங்குள்ள மக்களால் ரிஜெக்ட் செய்யப்பட்டவர் என்பவர் என்பதை மறந்துவிடக்கூடாது.

திருமங்கலம் - விமான நிலையச் சாலையில் ரயில்வே மேம்பாலம் அமைப்பதற்கு, தற்போதுள்ள  திமுக அரசு அதற்கான பணிகளை செய்வதற்கு மும்முரம் காட்டி வருகிறது. கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் அமைச்சராகவும் , எம்எல்ஏவாகவும் உள்ள ஆர் பி உதயகுமார் மூன்று முறை பூமி பூஜை செய்து,  ரயில்வே மேம்பாலம் அமைப்பதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்காதது குறிப்பிடத்தக்கது. திருமங்கலம் அருகே கப்பலூர் சுங்கச்சாவடியை இடமாற்றம் செய்வது குறித்து சில மாதங்களுக்கு முன்பு ஒன்றிய நிதி அமைச்சர் நிதி கட்கரியிடம் பேசினேன். அதற்கான நடவடிக்கை எடுப்பதற்கு ஏப்ரல் மாதம் ஆகும் என ஒன்றிய அமைச்சர் தெரிவித்துள்ளதால், அப்போது அதற்கான தீர்வு கிடைக்கும்” என தெரிவித்தார்.