×

150 பவுனுக்கு மேல் நகை, பல லட்சம் பணம்... புதிய நகை செய்து தருவதாக கூறி அத்தனையையும் சுருட்டி கொண்டு ஓடிய நபர்- மக்கள் கண்ணீர்

 

கரூரில் பொதுமக்களிடம் தங்க நகைகளையும், பல லட்ச ரூபாய் பணத்தையும் பெற்று ஏமாற்றிவிட்டு தலைமறைவாக உள்ள நகைக்கடை உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரி பாதிக்கப்பட்ட பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கரூர், ஜவகர் பஜார் பகுதியில் கைராசி ஜூவல்லர்ஸ் என்ற தனியார் நகைக்கடை செயல்பட்டு வந்தது. திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தரை பூர்வீகமாகக் கொண்ட கந்தசாமி என்பவர் இந்த நகைக்கடையை நடத்தி வந்துள்ளார். கரூரில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நகைக்கடை செயல்பட்டு வந்துள்ளது. கரூர் நகரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் இந்த நகைக்கடையில் தங்களது பழைய நகைகளை புதிய நகைகளாக மாற்றி தருவதற்கு கொடுத்துள்ளனர். அதேபோல் பலர் நகைகள் செய்வதற்கு பல லட்ச ரூபாய் பணமும் கொடுத்துள்ளனர். மேலும், நகை தவணை சீட்டுகளுக்கும் பொதுமக்கள் பலர் முதலீடு செய்துள்ளனர். 

இந்த நிலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கந்தசாமி நகை கடையை பூட்டிவிட்டு தலைமறைவாகி உள்ளார். இதையடுத்து தங்க நகைகளையும், பணத்தையும் முதலீடு செய்த பொதுமக்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் அடிப்படையில் கந்தசாமி மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை தேடி வருகின்றனர். தலைமறைவாக உள்ள கந்தசாமியை காவல்துறையினர் கைது செய்யாமல் காலம் தாழ்த்தி வருகின்றனர் என்ற குற்றச்சாட்டுடன் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் 50-க்கும் மேற்பட்டோர் இன்று ஜவஹர் பஜாரில் அமைந்துள்ள சம்பந்தப்பட்ட நகைக்கடை முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு கண்டன கோஷங்களை எழுப்பினர். இதுகுறித்து தகவலறிந்து அப்பகுதிக்கு வந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி நகைக் கடை உரிமையாளர் கந்தசாமியை விரைந்து கைது செய்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் பேரில் அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.