ரம்பத்தால் மாணவியை தாக்கிய குற்றவாளியின் வலது கால் அகற்றம்..!
ஆந்திராவின் அனந்தபூரில், காதலை ஏற்க மறுத்த உறவினர் மாணவியை மரம் அறுக்கும் ரம்பத்தால் கொடூரமாக வெட்டி தாக்கிய ஹேமந்தை (21) போலீசார் கைது செய்தனர். நேற்று வனப்பகுதியில் பதுங்கியிருந்த ஹேமந்தை பிடிக்க முயன்றபோது, அவர் போலீசாரை தாக்கி தப்பியோட முயன்றார். இதையடுத்து, தற்காப்புக்காக போலீசார் துப்பாக்கியால் சுட்டதில், அவனது வலது காலில் பலத்த காயம் ஏற்பட்டது. சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், திசுக்கள் அழுகிய பாதிப்பு ஏற்பட்டதால், அறுவை சிகிச்சை மூலம் கால் அகற்றப்பட்டது.
ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டம், ரப்தாடு மண்டலத்தில் உள்ள ஒரு அரசு பள்ளியில் இன்று (சனிக்கிழமை) காலை பாடம் நடந்துகொண்டிருந்தபோது, 21 வயது இளைஞர் ஒருவர் ரம்பத்துடன் 10-ஆம் வகுப்புக்குள் நுழைந்ததாக கூறப்படுகிறது. அங்கு மாணவி ஒருவர் மீது சங்கிலி அறுக்கும் ரம்பத்தால் கொடூர தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில், மாணவியின் முகம், தலை மற்றும் கழுத்தில் பலத்த காயங்கள் ஏற்பட்டதோடு, அவருக்குக் கடுமையான இரத்தப்போக்கும் ஏற்பட்டது.
காவல்துறையின் முதற்கட்ட விசாரணையின் படி ரப்தாடு கிராமத்தில் உள்ள மாவட்டப் பஞ்சாயத்து உயர்நிலைப் பள்ளியில் காலை சுமார் 10.30 மணியளவில் இந்த தாக்குதல் நிகழ்ந்துள்ளது. ஆசிரியர் ஒருவர் வகுப்பறையில் இருந்தபோதும், பாடங்கள் நடந்துகொண்டிருந்தபோதும் இந்த தாக்குதல் நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாக்குதலுக்கு பிறகு, அவர் பள்ளியிலிருந்து தப்பிச் சென்றநிலையில், தலைமறைவாக இருந்தார். அவரை கண்டுபிடிப்பதற்கான தேடுதல் வேட்டை நடந்து வந்தது. இந்த தாக்குதல் மாணவர்கள் மற்றும் பள்ளியில் பணிபுரியும் ஊழியர்களிடையே பீதியை ஏற்படுத்தி இருந்தது.
இந்நிலையில் வகுப்பறைக்கு சென்று மாணவியை ரம்பத்தால் தாக்கிய ஹேமந்த் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
"முதற்கட்ட விசாரணையில், அவர் பாதிக்கப்பட்ட மாணவியின் உறவினர் என்பது தெரியவந்துள்ளது. இருப்பினும், மாணவி சுயநினைவு திரும்பியதும் அவரிடம் வாக்குமூலம் பெற்று, இருவருக்கும் இடையே காதல் தொடர்பு இருந்ததா அல்லது வேறு ஏதேனும் பிரச்னைகள் இருந்தனவா என்பது குறித்து விசாரிப்போம். தாக்குதலுக்குப் பிறகு பள்ளியிலிருந்து தப்பிச் சென்ற குற்றம் சாட்டப்பட்டவரை தர்மாவரம் ரயில் நிலையத்தில் காவல்துறையினர் பிடித்துவிட்டதாகக் கூறப்படுவது உண்மையல்ல," என்று அவர் தெரிவித்தார்.