×

“ஒழுங்கா தீர்ப்பு சொல்லணும்”- நீதிபதியை நோக்கி அரிவாளை வீசிய நபர்! நீதிமன்றத்தில் அதிர்ச்சி

 

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர் குடும்ப நல நீதிமன்றத்தில் தீர்ப்பு தனக்குச் சாதகமாக வரவில்லை என்று கூறி ஒரு நபர், நீதிபதியை நோக்கி அரிவாளை வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் செங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் பாலமுருகன்- தங்க முனீஸ்வரி தம்பதியினர். இவர்கள் மீது குடும்ப நல நீதிமன்றத்தில் ஜீவனாசம் வழக்கு ஒன்று நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் அந்த வழக்கில் தீர்ப்பு வர உள்ள நிலையில் இன்று வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்திற்கு வருகை தந்த போது அங்கு வழக்கு விசாரணை நடந்து கொண்டிருக்கும் போது தான் மறைத்து வைத்திருந்த அருவாளை எடுத்து பாலமுருகன் உள்ளே வீசி உள்ளார். அப்போது வழக்கறிஞர் அமரும் இடத்தில் அருவாள் விழுந்துள்ளது இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இது தொடர்பாக தகவல் கிடைத்தவுடன் டிஎஸ்பி பாலசுந்தரம் நகர் இன்ஸ்பெக்டர் சிவபாலன் தலைமையில் போலீசார் விரைந்து வந்து பாலமுருகனை பிடித்து நகர் காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். விசாரணையில் அவருக்கும் அவரது மனைவிக்கும் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக ஜீவனாம்சம் வழக்கு ஒன்று நடைபெற்று வருகிறது. நாளை வழக்கு விசாரணை வர உள்ள நிலையில் இன்று அருவாளை கொண்டு வந்து வீசியது தெரியவந்துள்ளது. வன்கொடுமை தடுப்பு நீதிமன்ற நீதிபதியாக இருப்பவர் சுதாகர். அவர்தான் குடும்ப நல நீதிமன்றத்திற்கும் பொறுப்பு நீதிபதியாக உள்ளார். இந்த நிலையில் வாலிபர் பாலமுருகன் அரிவாளை வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சம்பவம் தொடர்பாக நீதிமன்ற சிரசுதார் முருகையா அளித்த மனுவின் பேரில் விசாரணை நடைபெற்று வருகிறது.

நீதிமன்றத்தை பொறுத்த வரை நுழைவாயில் பகுதியில் சுமார் எட்டுக்கும் மேற்பட்ட போலீசார் வழக்கு விசாரணை தொடர்பாக யார் வந்தாலும் விசாரணை நடத்தி சோதனை செய்த பின்னரே அனுப்பி விடுவது வழக்கம். இதனால் பாலமுருகன் நீதிமன்றத்திற்கு பின்புறம் உள்ள காம்பவுண்டு சுவரை தாண்டி  காம்பவுண்ட் சுவரை தாண்டுவதற்கு ஸ்டூல் ஒன்றை பயன்படுத்தி உள்ளே குதித்து அருவாளுடன் வந்தது தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்ற வளாகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.