×

அஸ்ஸாமில் கொடூரம்: சந்தேகத்தால் காதலியை கத்தரிக்கோலால் குத்தி கொன்ற இளைஞர் – தற்கொலை முயற்சிக்கு பின் கைது!

 

சோனிட்பூர் மாவட்டம் ஹுக்ராஜூலியைச் சேர்ந்த மாலினி குரியா (23) என்ற பெண், தனது தோழிகள் இருவருடன் சென்னையிலிருந்து இரயில் மூலம் ரங்கியா இரயில் நிலையத்திற்கு வந்து சேர்ந்துள்ளார். உடல்குரி மாவட்டத்தைச் சேர்ந்த அவரது காதலன் அபிஜித் கிண்டோ (22) என்பவர், அவர்களை அழைத்துச் செல்வதற்காக இரயில் நிலையத்திற்கு வந்துள்ளார்.

பின்னர், அனைவரும் ரங்கியா இரயில் நிலையம் அருகில் உள்ள ஒரு விடுதியில் தங்கியுள்ளனர். அபிஜித் தனியாக ஒரு அறையை முன் பதிவு செய்திருந்த போதிலும், இரவில் மாலினியின் அறைக்குச் சென்று அங்கேயே தங்கியுள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை அதிகாலை, மாலினியின் தோழிகளைத் தொடர்புகொண்ட அபிஜித், தான் மாலினியைக் கொன்றுவிட்டதாகவும், தானும் தற்கொலை செய்துகொள்ளப்போவதாகவும் கூறியுள்ளார். அதிர்ச்சியடைந்த தோழிகள் மற்றும் இரயில்வே ஆய்வாளர் அளித்த தகவலின் பேரில் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

அங்கு விடுதி அறையில் இரத்த வெள்ளத்தில் மாலினி பிணமாகக் கிடந்துள்ளார். கத்தரிக்கோல் மற்றும் டெஸ்டர் (Tester) ஆகிய கருவிகளைப் பயன்படுத்தி அவர் கொடூரமாகக் குத்திக் கொல்லப்பட்டிருந்தது தெரியவந்தது. அதே அறையில் காயங்களுடன் இருந்த அபிஜித்தை காவல்துறையினர் மீட்டனர். தற்கொலை முயற்சியின் போது அவருக்குக் காயங்கள் ஏற்பட்டதால், உடனடியாக அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்குப் பின் அவர் கைது செய்யப்பட்டார்.

காவல்துறை காவலில் இருந்தபோது செய்தியாளர்களிடம் பேசிய குற்றவாளி அபிஜித், "அவள் என்னைக் ஏமாற்றினாள். வேறு ஆண்களுடன் பேசி வந்தாள். அதனால் அவள் ஊருக்கு வருவதற்கு முன்பே இந்தக் கொலையைச் செய்யத் திட்டமிட்டிருந்தேன்" எனக் கூறி, கத்தரிக்கோலால் குத்திக் கொன்றதை ஒப்புக்கொண்டார்.

கௌஹாத்தியில் இருந்து வந்த தடயவியல் குழுவினர் சம்பவ இடத்தில் ஆதாரங்களைச் சேகரித்தனர். மாலினியின் சடலம் உடற்கூறாய்வுக்காகக் கௌஹாத்தி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு (GMCH) அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இக்கொலைக்கான முழுமையான பின்னணி குறித்து அஸ்ஸாம் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.