12 வயது சிறுமியை சீரழித்த இளைஞருக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை!
திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த சுபாஷ் (வயது 29) என்பவர் 12 வயது சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாக நம்பிக்கை ஏற்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து சிறுமியின் தாயார், காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் கடந்த 2022- ஆம் ஆண்டு அக்டோபர் 17- ஆம் தேதி அன்று போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
அப்போது காவல் நிலைய ஆய்வாளராக இருந்த பிரேமா தீவிர விசாரணை நடத்தி இளைஞர் சுபாஷை கைது செய்தார். தொடர்ந்து புலன் விசாரணை நிறைவடைந்து நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட நிலையில், திருநெல்வேலி போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்றது.
அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் இன்று (ஆக.07) வழக்கு விசாரணைக்கு வந்தபோது நீதிபதி சுரேஷ்குமார், குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதைத் தொடர்ந்து சுபாஷுக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூபாய் 10,000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழ்நாடு அரசு, ரூபாய் 3 லட்சம் நிவாரணத் தொகை வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.