☰
×

மனைவியை கொன்று எரித்து எலும்புகளை ஆற்றில் வீசிய கணவன்..!

 

டெல்லி ஆக்ரா அச்னேரா அருகே குடும்பத் தகராறில் மனைவி சாந்தினியைக் (30) கொன்ற கணவர் லோகேந்திரா (32), வீட்டின் பின்புறம் உடலை எரித்துள்ளார். பின்னர் எஞ்சிய எலும்புகளை யமுனை ஆற்றில் வீசியுள்ளார். பின் கொலையை மறைக்க மனைவி மாயமாகிவிட்டதாக நாடகமாடியுள்ளார். சாந்தினியின் குடும்பத்தினர் அளித்த புகாரில் போலீசார் நடத்திய விசாரணையில் லோகேந்திரா உண்மையை ஒப்புக்கொண்டார். அவரை கைது செய்த போலீசார், யமுனை ஆற்றில் இருந்து சாந்தினியின் எலும்புகளை மீட்டுள்ளனர்.

உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ரா அருகே உள்ள அச்னேரா காவல் எல்லைக்குட்பட்ட குக்தாலா கிராமத்தைச் சேர்ந்தவர் சாந்தினி. திருமணமான இவர் திடீரென மாயமானதாக அவரது சகோதரர் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் தேடுதல் வேட்டையைத் தொடங்கினர்.

மனைவியைத் தேடுவது போல் நாடகம்:

சாந்தினி மாயமான செய்தி பரவியதும், அவரது குடும்பத்தினருடன் சேர்ந்து கணவன் லோகேந்திராவும் அவரைத் தேடுவது போல் நடித்து நாடகமாடியுள்ளார். இந்நிலையில், சாந்தினியின் 2 வயது பெண் குழந்தை பக்கத்து வீட்டில் கண்டெடுக்கப்பட்டதும் காவல்துறையினரின் சந்தேகம் லோகேந்திரா மீது திரும்பியது. லோகேந்திராவை காவல் நிலையம் அழைத்துச் சென்று தீவிர விசாரணை நடத்தியதில் கொடூரக் கொலை வழக்கு வெளிச்சத்திற்கு வந்தது.

கொலை செய்தது எப்படி?

தம்பதியிடையே ஏற்பட்ட தகராறில், லோகேந்திரா சாந்தினியின் தலையில் பலத்த பொருளால் தாக்கியுள்ளார். இதில் சாந்தினி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கொலையை மறைப்பதற்காக, உடலை வீட்டின் பின்புறம் உள்ள கொட்டகைக்குக் கொண்டு சென்று பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளார். பின்னர் எஞ்சிய உடல் பாகங்களையும், மனைவியின் செல்போனையும் யமுனை ஆற்றில் வீசிவிட்டு, தனது செல்போனையும் சுவிட்ச் ஆஃப் செய்து தப்பிக்க முயன்றுள்ளார்.

காவல்துறை விசாரணை தீவிரமடைந்தது:

லோகேந்திரா கொடுத்த தகவலின் பேரில், யமுனை ஆற்றங்கரையில் இருந்து சாந்தினியின் உடல் பாகங்கள் மற்றும் செல்போனை காவல்துறையினர் மீட்டுள்ளனர். தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு முக்கிய தடயங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.

திருமணம் ஆன நாளில் இருந்தே லோகேந்திரா சாந்தினியைத் தொடர்ந்து சித்திரவதை செய்து வந்ததாக அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். இது குறித்துப் பேசிய அச்னேரா உதவி ஆணையர் (ACP) ஷைலேந்திர சிங், "லோகேந்திரா கைது செய்யப்பட்டுள்ளார். இக்கொலையில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா மற்றும் கொலையின் பின்னணியில் உள்ள முழுமையான காரணம் குறித்துத் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது" எனத் தெரிவித்தார்.