முதலமைச்சர் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கைது
முதலமைச்சர் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கைது செய்யப்பட்டார்.
முதலமைச்சர் வீட்டில் வெடிகுண்டு வைத்ததாக தமிழக காவல்துறையின் தலைமை இயக்குநர் அலுவலக மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் ஒன்று வந்தது. அதனை படித்து பார்த்து அதிர்ச்சியடைந்த போலீஸார், உடனடியாக உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்த உயர் அதிகாரிகள், சோதனை நடத்தும்படி உத்தரவிட்டனர். இதையடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீட்டிற்கு வெடிகுண்டுகளை கண்டறிந்து அகற்றும் நிபுணர்களும், போலீஸாரும் அங்கு சோதனை செய்தனர். அங்கு நடைபெற்ற சோதனையில் அங்கிருந்து எந்த வெடிப் பொருளும் கண்டெடுக்கப்படவில்லை. இதனால் வதந்தியை பரப்பும் நோக்கத்துடன் அந்த மின்னஞ்சல் வந்திருப்பது போலீஸாருக்கு தெரியவந்தது. இது தொடர்பாக சைபர் குற்றப்பிரிவு போலீஸார், விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் சென்னை அடுத்த திருப்போரூரை சேர்ந்த ஐயப்பன் என்ற நபர் மதுபோதையில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது தெரியவந்தது. உடனே அவரை போலீசார் கைது செய்தனர். இவர் 2020ல் கோயம்பேடு பேருந்து நிலையம், சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கும் மிரட்டல் விடுத்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்.