×

கோடநாடு வழக்கு விசாரணை நடக்கும் இடத்தில் வெடிகுண்டு? - போலீஸார் விசாரணையில் திடுக் தகவல்!

 

கோவை அவினாசி சாலையில் காவலர் பயிற்சி பள்ளி வளாகம் அமைந்துள்ளது. சுருக்கமாக பி.ஆர்.எஸ். வளாகம் என சொல்லப்படுகிறது. இங்கு அமைந்துள்ள குடியிருப்பில் காவலர் விமல்ராஜ் என்பவர் குடும்பத்தினருடன் வசித்துவருகிறார்.  இந்நிலையில் நேற்று இரவு சுமார் 11 மணியளவில் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு அழைத்த மர்ம நபர்,ம் விமல்ராஜ் வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாகவும், முடிந்தால் தன்னை கைது செய்யுமாறும் கூறியுள்ளார். 

இதுதொடர்பாக விமல்ராஜ் புகாரளிக்க வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தினர். ஆனால் வெடிகுண்டுகள் கிடைக்கவில்லை. ஆகவே இது வெறும் வதந்தி என போலீஸார் முடிவுசெய்தனர். விசாரணை நடத்தியதில் மிரட்டல் விடுத்தவர் புலியகுளம் பகுதியைச் சேர்ந்த மோகனகாந்தி என்பது தெரியவந்தது. விமல்ராஜின் உறவினரான மோகனகாந்தி, அவர் மீதான குடும்ப முன் விரோதம் காரணமாக மது போதையில் இவ்வாறு மிரட்டல் விடுத்ததும் தெரியவந்தது. 

முக்கிய வழக்குகளில் குற்றவாளிகளை காவலில் எடுத்து காவல் துறையினர், பாதுகாப்பிற்காக இங்குள்ள அலுவலகங்களில் வைத்து விசாரணை நடத்துவார்கள். தற்போது கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக பல்வேறு தரப்பினரிடமும் இங்கு விசாரணை நடைபெற்று வருகிறது. குறிப்பாக நேற்று கோடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜனிடம் நீலகிரி மாவட்ட தனிப்படை காவல் துறையினர் விசாரணை நடத்தினர். இந்நிலையில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.