×

மலையாள நடிகை மினு முனீர் போக்சோ வழக்கில் கைது..! 

 

கேரளாவை சேர்ந்தவர் மினு முனீர் என்கிற மினு குரியன் (52). இவர் 2008-ம் ஆண்டு மலையாள சின்னத்திரையில் அறிமுகமாகி பின்னர் பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார்.இவர் கடந்த 10 வருடங்களுக்கு (2014) முன் உறவினர் மகளான 14 வயது சிறுமியை நடிக்க வைப்பதாக கூறி கேரளாவில் இருந்து சென்னைக்கு அழைத்து வந்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து சென்னையில் ஒரு தனியார் விடுதியில் அந்த சிறுமியை நான்கு நபர்கள் தவறாக நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. அப்போது அந்த சிறுமி அங்கிருந்து தப்பித்து கேரளாவிற்கு சென்றார். அப்போது தான் கேரளாவில் ஹேமா கமிட்டி உருவக்கப்பட்டது. திரைத் துறையில் பெண்கள் எதிர் கொள்ளும் பிரச்சனைகள், பாலியல் தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் நோக்கத்தில் ஹேமா கமிட்டி கேரள அரசால் உருவாக்கப்பட்டது.

இதனையடுத்து அந்த சிறுமி 2024 ஆம் ஆண்டு கேரள காவல் துறையில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட கேரளா போலீசார், சம்பவம் நடைபெற்ற இடம் சென்னை என்கிற காரணத்தினால் வழக்கை சென்னை திருமங்கலத்திற்கு மாற்றம் செய்தனர்.

இதனையடுத்து திருமங்கலம் அனைத்து மகளிர் போலீசார், கடந்த மார்ச் மாதம் கேரள நடிகை மினு முனீர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

விசாரணையின் முடிவில் திருமங்கலம் போலீசார் நேற்று கேரளாவில் மினு முனிரை கைது செய்து, இன்று காலை ரயில் மூலமாக சென்னை அழைத்து வந்தனர். கைது செய்யப்பட்ட நடிகையை விசாரணைக்கு பிறகு போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க இருப்பதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.