×

மாமல்லபுரம் அருகே கடலில் குளித்த கல்லூரி மாணவர்கள் இருவர் உயிரிழப்பு

 

மாமல்லபுரம் அருகே சூளேரிக்காடு கடலில் குளித்த கல்லூரி மாணவர்கள் இருவர் உயிரிழந்தனர். ஒருவர் உடல் கரை ஒதுங்கிய நிலையில் மாயமான மற்றொரு மாணவரின் உடலை போலீசார் தேடி வருகின்றனர்.  

சென்னை மேற்கு கே.கே.நகர் பகுதியை சேர்ந்தவர் ஜெகன்(வயது18), இவர் கிண்டி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் பிட்டர் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். அதே மேற்கு கே.கே.நகர் பகுதியை சேர்ந்தவர் அருண்(வயது18), இவர் மதுரவாயல் எம்.ஜி.ஆர். பல்கலைக்கழகத்தில் பி.சி.ஏ. முதலாம் ஆண்டு படித்து வருகிறார். ஒரே பகுதியை சேர்ந்த நண்பர்களான ஜெகன், அருண் ஆகியோர் தங்களது சக கல்லூரி நண்பர்களான ராகுல்(18), கிருஷ்ணா(வயது17) ஆகியோருடன் பொங்கல் விடுமுறை தினத்தை கொண்டாடுவதற்காக இரண்டு மோட்டார் சைக்கிளில் 4 பேரும் இன்று செனனையில் இருந்து கிழக்கு கடற்கரை சாலை வழியாக மாமல்லபுரம் அருகே உள்ள சூளேரிக்காடு கடற்கரைக்கு வந்தனர். அங்கு நான்கு பேரும் கடலில் குளித்துள்ளனர். கடல் சீற்றம் அதிகமாக இருந்த காரணத்தால் ஆழமான கடல் பகுதியில் குளித்து கொண்டிருந்த ஜெகன், அருண் இருவரையும் ராட்சத அலை நடுக்கடலுக்கு இழுத்து சென்றது. அருகில் குளித்து கொண்டிருந்த சக நண்பர்கள் ராகுல், கிருஷ்ணா ஆகியோர் தங்கள் நண்பர்களை காப்பாற்றுங்கள்... காப்பாற்றுங்கள் என கூச்சல் போட்டனர். 

அப்பகுதி மீனவர்கள் இருவரையும் நீந்தி சென்று காப்பாற்ற முயன்றபோது, அதிவேகத்தில் உள்வாங்கிய ராட்சத அலை கண்ணிமைக்கும் நேரத்தில் இருவரையும் நடுக்கடலுக்கு இழுத்து சென்றுவிட்டது. பின்னர் ஒரு மணி நேரம் கழித்து ஜெகன் உடல் மட்டும் கரை ஒதுங்கியது. பிறகு தகவல் அறிந்து அங்கு விரைந்து சென்ற மாமல்லபுரம் போலீசார் கரை ஒதுங்கி காணப்பட்ட ஜெகன் உலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு பொதுமருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மாயமான அருண் உடலை தீயணைப்பு வீரர்கள் மற்றும் மீனவர்கள் உதவியுடன் மாமல்லபுரம் போலீசார் படகில் கடலுக்கு சென்று தேடி வருகின்றனர். மாட்டு பொங்கல் தினத்தன்று இரண்டு கல்லூரி மாணவர்கள் இறந்த சம்பவம் சூளேரிக்காடு கடற்கரை பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது...