×

மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி நிறைவு

 

பொங்கலை ஒட்டி மதுரை பாலமேட்டில் விறுவிறுப்பாக நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி நிறைவு பெற்றது.

மதுரை உலகப் புகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று காலை தொடங்கிவைத்தார். காலை முதல் விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில், 4000க்கும்  மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் சிறந்த மாடுபிடி வீரருக்கு கார் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், மதுரை பொந்துகம்பட்டியை சேர்ந்த வீரர் அஜித், பொதும்பு பிரபாகரன் தலா 16 காளைகளை அடக்கி முதலிடம் பிடித்துள்ளனர். இரு வீரர்கள் முதலிடம் பிடித்திருப்பதால், குலுக்கல் முறையில் முதல் பரிசுக்கான வீரரை தேர்வு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  கார்த்தி, நாமக்கல் ஆகிய இருவரும் தலா 11 காளைகளை அடக்கி இரண்டாம் இடத்தை பிடித்துள்ளனர்.

சிறந்த ஜல்லிக்கட்டு காளைக்கு டிராக்டர் மற்றும்  கன்றுடன் கூடிய நாட்டின பசுமாடு வழங்கப்பட்டன. மேலும் இரு சக்கர வாகனம், தங்க காசு, கட்டில், பீரோ, மெத்தை, ரொக்க பணம் என எண்ணற்ற பரிசுகள் வழங்கப்பட்டன. போட்டியில் 870 காளைகள் அவிழ்க்கப்பட்டன. 461 வீரர்கள் பங்கேற்று காளைகளை அடக்கினர்.