×

"அரசியல் தலையீட்டுடன் கோயில் நிர்வாகம் தன்னிச்சையாக செயல்படுகிறது"- மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அறங்காவலர் குழுத்தலைவர்

 

 

எங்களிடம் கலந்தாலோசிக்காமல் தன்னிச்சையாக நிர்வாகம் செயல்படுவதாக மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அறங்காவலர் குழுத்தலைவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

மதுரையில் பிரசித்தி பெற்ற மீனாட்சி அம்மன் திருக்கோவில் கும்பாபிஷேகம் 17 ஆண்டுகளுக்கு பின் 17.09.2026 அன்று காலை 7.40 மணி முதல் 8.10 மணி வரை நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு, பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு பாதுகாப்பான, சீரான மற்றும் தங்குதடையற்ற போக்குவரத்து வசதியை ஏற்படுத்தும் வகையில் போக்குவரத்துத் துறையின் சார்பில் விரிவான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சிறப்பு ரயில் மற்றும் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. குடமுழுக்கு விழாவையொட்டி செப்.17ஆம் தேதி மதுரை மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அறங்காவலர் குழுத்தலைவர் ருக்மணி பழனிவேல்ராஜன், “உலக பிரசித்தி பெற்ற மீனாட்சியம்மன் கோவில் குடமுழுக்கு 17 ஆண்டுகளுக்கு பின் தற்போது நடைபெறவுள்ளது. உலகமே எதிர்பார்க்கும் இந்நிகழ்வில் எவ்வித கருத்துவேறுபாடுகளுக்கும் இடமளித்துவிடாமல் அனைவரும் இணைந்து மகிழ்ச்சியாக நடத்திட வேண்டும். விழா சீரும் சிறப்புமாக நடைபெறவேண்டும். பக்தர்களின் பாதுகாப்புடன் முறையான வழிகாட்டு நெறிமுறைகள் வெளிப்படையாக வெளியிடப்பட்டுள்ளதா என்பது கேள்வி குறியாக உள்ளது. எங்களை எந்த செயல்பாட்டிலும் கலந்தாலோசிக்காமல் தன்னிச்சையாக அரசியல் தலையீட்டுடன் கோவில் நிர்வாகம் செயல்படுகிறது. அனுமதி அட்டைகள் ரூ.9000 எனவும், ரூ.11,000 எனவும் செய்திகள் வெளியாகியுள்ளன. மிகவும் மதிப்புதக்க நன்கொடைதாரர்கள் மற்றும் உபயோகதாரர்களுக்கு அழைப்பு சென்று சேர்ந்துள்ளதா என்பது குறித்து எங்களுக்கு தெரியப்படுத்தவில்லை. யாரெல்லாம் விடுபட்டார்கள் என்ற பட்டியல் குறித்து நாங்கள் கூறியும் கோவில் நிர்வாகம் அதனை பொருட்படுத்தவில்லை. 1963 ஆம் ஆண்டில் இருந்து சிறப்பாக குடமுழுக்கு நடத்தி, மீனாட்சி அம்மனுக்கு வைர கிரீடம் சார்த்திய எங்களின் குடும்பத்தில் என்றைக்குமே அரசியலையும், ஆன்மீகத்தையும் இணைந்து பார்த்ததே இல்லை. ஆன்மீக திருப்பணிகள் எவ்வளவு சீரும், சிறப்புமாக நடைபெறவேண்டும் என்பதில் கண்ணும் கருத்துமாக இருக்கும்நாங்கள் தான் அதில் அரசியல் கலந்துவிடக்கூடாது என்பதில் கவனமாக இருப்போம்” எனக் கூறியுள்ளார்.