×

கோயில் வழிபாட்டில் சாதி பாகுபாடு கூடாது - உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து

 

கோயில் வழிபாட்டில் சாதி பாகுபாடு கூடாது எனவும், அனைவரும் சமமாக நடத்தப்பட வேண்டும் என்றும் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அறிவுரை வழங்கியுள்ளது. 

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை சேர்ந்த மேடையாண்டி என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்து இருந்தார். அந்த மனுவில்,  தென்காசி மாவட்டம் திருவேங்கடத்தில் உள்ள தங்களது குலதெய்வ கோயிலில் வழிபாடு நடத்தவிடாமல் உயர்சாதியினர் தடுப்பதாகவும், தங்கள் குலதெய்வ கோயிலில் வழிபாடு நடத்த அனுமதிக்க வேண்டும் என்றும் கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்தார்.  இதுகுறித்து காவல்துறை மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை என்றும் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன், கோயில் வழிபாட்டில் பாகுபாடு கூடாது, அனைவரும் சமமாக நடத்தப்பட வேண்டும் என கூறினார். மனுதாரர் உள்ளிட்ட பட்டியலின மக்கள் கோயிலில் வழிபாடு செய்ய மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறை உறுதிப்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை பிப்ரவரி 27 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.