×

மதுரை மாநாடு : தேசிய நெடுஞ்சாலைகளில் இருந்த பேனர்கள் அகற்றம்..!!

 

நீதிமன்ற உத்தரவை அடுத்து  தவெக மாநாட்டை ஒட்டி தேசிய நெடுஞ்சாலை அருகே வைக்கப்பட்டிருந்த பேனர்கள் அகற்றப்பட்டன. 

தமிழக வெற்றிக் கழகத்தின்  2வது மாநில மாநாடு மதுரை அருகே உள்ள பாரபத்தி பகுதியில் நாளை (ஆக. 21ம் தேதி) நடைபெற இருக்கிறது. மாநாட்டிற்காக அங்கு 500 ஏக்கர் இடம் தேர்வு செய்யப்பட்டு மாநாட்டுக்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.  5 ஒருங்கிணைப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு மாநாட்டு மேடை மற்றும் ஒன்றரை லட்சம் பேர் அமரும் வகையில்  இருக்கைகள், மின் விளக்குகள், பந்தல் அமைப்பது, அலங்கார வளைவுகள் அமைப்பது உள்ளிட்ட பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன.  நாளை மாநாட்டை ஒட்டி அனைத்து பணிகளும் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இரவு பகலாக நிகழ்ச்சி ஒருங்கிணைப்புக் குழுவினர் பணியாற்றி வருகின்றனர்.  

 இந்த நிலையில் தவெக மாநாட்டு திடல் அருகே தேசிய நெடுஞ்சாலை அருகே அனுமதி பெறாமல் வைக்கப்பட்டிருந்த பேனர்களை அகற்ற வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனையடுத்து நீதிமன்ற உத்தரவுப்படி, பேனர்களை அகற்றக்கோரி தவெக நிர்வாகிகளிடம் காவல்துறையினர் கேட்டுக்கொண்டனர். அதன்பேரில் மாநாட்டு திடல் சுற்றுவட்டாரப்பகுதிகளில் தேசிய நெடுஞ்சாலைகளில் வைக்கப்பட்டிருந்த தமிழக வெற்றிக் கழகத்தின் பேனர்களை அக்கட்சி நிர்வாகிகள் அகற்றினர்.