×

நேரடி தேர்வுகள்... கொந்தளித்த மாணவர்கள் - தேர்வுகளை ஒத்திவைத்த மதுரை அமெரிக்கன் கல்லூரி!

 

கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாகவே வகுப்புகள் நடத்தப்பட்டன. மேலும் கல்லூரி மாணவர்களுக்கு சாதாரண தேர்வுகள் முதல் செமஸ்டர் தேர்வுகள் வரை ஆன்லைன் வழியாகவே நடைபெற்றன. தற்போது கொரோனா பரவல் முற்றிலும் குறைந்துவிட்டன. கல்லூரிகள் திறக்கப்பட்டுவிட்டன. இருப்பினும் மாணவர்கள் யாரும் கல்லூரிக்கு வர கட்டாயப்படுத்தப்படுவதில்லை. ஆன்லைன் வழியே வகுப்பைக் கவனிக்க நினைப்பவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

நேரடியாகவும் வகுப்புகளுக்கு வரலாம் என சொல்லப்பட்டுள்ளது. தற்போது இரண்டு முறைகளிலும் வகுப்புகள் நடத்தப்படுகின்றன. தற்போது செமஸ்டர் தேர்வுகள் நெருங்கி வருகின்றன. கொரோனா முழுவதுமாக குறைந்துவிட்டதால் நேரடி தேர்வு நடத்த பல்கலைக்கழகங்களும் கல்லூரிகளும் தீர்மானித்துள்ளன. ஆனால் மாணவர்கள் மத்தியில் இந்த முடிவு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஆன்லைன் வழியாக பாடங்களை நடத்திவிட்டு, தேர்வை நேரடியாக நடத்துவது சரியான அணுகுமுறை அல்ல என மாணவர்கள் கூறுகின்றனர்.

இச்சூழலில் மதுரை அமெரிக்கன் கல்லூரி மாணவர்கள் நேரடி தேர்வுகளை எழுத முடியாது எனக் கூறி திரளாகக் கூடி போராட்டத்தில் ஈடுபட்டனர். கல்லூரியிலிருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை மாணவர்கள் பேரணியாகச் சென்றனர். இதற்குப் பின்னர் மாணவர்களை அழைத்து அமெரிக்கன் கல்லூரி நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தியது. இதையடுத்து நேரடி தேர்வுகளை 2 வாரங்களுக்கு ஒத்திவைக்கிறோம். அதன்பின் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தித் தேர்வுகளை எப்படி நடத்துவது என முடிவு எடுப்போம் என கல்லூரி நிர்வாகம் அறிவித்தது.