அதிமுக எம்பி சி.வி.சண்முகம் மீது போடப்பட்ட வழக்கு ரத்து - சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு..!
சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனை கண்டித்தும், பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி கேட்டும், அதிமுகவின் முன்னாள் சட்டத் துறை அமைச்சரும், தற்போதைய எம்.பி-யுமான சி.வி. சண்முகம் தலைமையில் கடந்த 2024 ஆம் ஆண்டு டிசம்பர் 30 ஆம் தேதி விழுப்புரம் நான்கு வழிச் சாலை அருகே போராட்டம் நடைபெற்றது.
ஆனால், இந்த போராட்டத்திற்கு அனுமதி அளிக்கப்படவில்லை என்று கூறி, சி.வி. சண்முகம் உள்ளிட்டோர் மீது அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாக விழுப்புரம் மேற்கு காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில், தனக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று அதிமுக எம்பி - சி.வி.சண்முகம் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு, சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஜனநாயக ரீதியில் போராட்டத்தில் ஈடுபடுவதை சட்டவிரோதமாக கூடுவதாக கருத முடியாது என்பதால் வழக்கை ரத்து செய்ய வேண்டுமென சி.வி சண்முகம் தரப்பில் வாதிடப்பட்டது.
இந்த வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதி ஜெகதீஷ் சந்திரா, அதிமுக எம்பி சி.வி.சண்முகம் மீது போடப்பட்ட வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.