×

"நீர்நிலை இடங்களை பதிவு செய்ய கூடாது".. பத்திரப்பதிவு துறைக்கு பறந்த உத்தரவு - ஆக்கிரமிப்பாளர்களுக்கு ஹைகோர்ட் செக்!

 

தமிழ்நாடு முழுவதும் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி பல்வேறு வழக்குகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ளன. இந்த வழக்குகள் அனைத்தும் ஒன்றுசேர்க்கப்பட்டு மொத்தமாக பொறுப்பு தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி, நீதிபதி பி.டி.ஆதிகேசவலு அமர்வு முன் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கடந்த முறை இம்மனு விசாரணைக்கு வந்தபோது, மாநிலம் முழுவதும் உள்ள நீர்நிலைகளின் எண்ணிக்கை, பரப்பு உள்ளிட்ட விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய தலைமைச் செயலருக்கு  உத்தரவிட்டிருந்தார்கள்.

அதன்படி தலைமைச் செயலாளர் இறையன்பு சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் அந்த அறிக்கையில் முழு விவரங்கள் இல்லை என்று கூறி தலைமைச் செயலரை டிசம்பர் 16 அன்று நேரில் ஆஜராக உத்தரவிட்டனர்.  இதையடுத்து அரசு தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் கேட்டுக்கொண்டதற்கிணங்க அவர் ஆஜராவதிலிருந்து நீதிபதிகள் விலக்களித்தனர். இதற்குப் பிறகு அவர் தரப்பில் ஆக்கிரமிப்புகள் குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில் தமிழ்நாடு முழுவதும் உள்ள நீர்நிலைகளில் 47 ஆயிரத்து 707 ஏக்கர் பரப்பளவு ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

அதேபோல  நீர்நிலை ஆக்கிரமிப்புகளை தடுக்கவும், அகற்றவும் வருவாய்த்துறை உள்ளிட்ட பிற துறை அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கும் விதமாக சட்டத்திருத்தம் கொண்டுவர அரசு முடிவு செய்துள்ளது. அதுமட்டுமல்ல ஆக்கிரமிப்பாளர் மீது குற்ற நடவடிக்கை எடுக்கவும் இந்த சட்டத்தில் பிரிவுகள் சேர்க்கப்படும் என்றும் சொல்லப்பட்டது. இதனை பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், "நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற தவறினால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள், நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் தெரிவிக்க நேரிடும். நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகள் இல்லாமல் பார்த்துக் கொள்வது அதிகாரிகளின் கடமை.

ஒருவேளை அகற்றப்பட்ட நீர்நிலைகளில் மீண்டும் ஆக்கிரமிப்புகள் முளைத்தால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்” என உத்தரவிட்டனர். இச்சூழலில் இந்த மனு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போதூ நீதிபதிகள், ஆக்கிரமிப்புகளை தவிர்க்க பதிவுத்துறையினர் நீர்நிலைகள் தொடர்பான இடங்களை எந்த பதிவும் செய்யக் கூடாது. ஆக்கிரமிப்பு இல்லை என்ற சான்று பெற்றால் மட்டுமே சொத்து வரி, மின்சாரம், குடிநீர் இணைப்பு வழங்க வேண்டும். பத்திரப்பதிவு கோரும் கட்டடங்கள் நீர்நிலையில் இல்ல்லை என ஆய்வு செய்து உறுதி செய்ய வேண்டும். நீர்நிலைகளில் ஆக்கிரமிப்பு நிலங்களுக்கு ஒப்புதல் அதிகாரிகள் அனுமதி வழங்கியிருந்தால் குற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்” என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.