×

"போலீஸ் வேடிக்கை பார்ப்பது ஆபத்து; மக்களும் கவனிக்கிறார்கள் கவனம்" - குட்டு வைத்த ஹைகோர்ட்!

 

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மறைந்த முன்னாள் எம்.பி. அன்பரசு தேசிய சின்னங்கள் மற்றும் அடையாளங்களை தவறாக பயன்படுத்தியதாகவும், அதை தடுப்பதற்கான சட்ட விதிகளை காவல்துறை பின்பற்றுவதில்லை எனவும் கூறி, சினிமா பைனான்சியர் முகுந்த்சந்த் போத்ரா என்பவர் 2014ஆம் ஆண்டு வழக்கு தொடர்ந்திருந்தார். முகுந்த்சந்த் மறைவிற்கு பிறகு இந்த வழக்கை அவர் மகன் ககன் சந்த் போத்ரா நடத்தி வருகிறார். இந்த வழக்கு விசாரணை நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன்னிலையில் நடைபெற்று வருகிறது.

கடந்த முறை உத்தரவு பிறப்பித்த நீதிபதி, முன்னாள் எம்.பி.க்கள், அமைச்சர்கள் மற்றும் ஓய்வுபெற்ற நீதிபதிகள் தேசிய மற்றும் மாநில அரசின் சின்னங்களை தவறாக பயன்படுத்துவதை தடுக்க வேண்டும் எனவும், இதுபோன்ற செயல்பாடுகள் மீது சாதாரண காவலர்கள் கூட நடவடிக்கை எடுக்கும் வகையில் விதிகளை அமல்படுத்த வேண்டும் என்றும் கூறினார். மேலும் இதுதொடர்பாக டிஜிபியும், சென்னை மாநகர காவல் ஆணையரும் ஆலோசனை வழங்க உத்தரவிட்டு, விசாரணையை ஜனவரி 3ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

இன்று சென்னை மாநகர காவல்துறை கூடுதல் ஆணையர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், தேசிய, மாநில சின்னங்கள் தவறாக பயன்படுத்தப்பட்டதாக ஒரு வழக்குக் கூட பதிவு செய்யப்படவில்லை என்று தகவல் வெளியாகியிருந்தது. இந்த தகவலையடுத்து, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியன் கடுமையாக சாடியுள்ளார். அவர், "குற்றம் நடப்பதை காவல்துறையினர் வேடிக்கை பார்ப்பது என்பது ஆபத்தானது.  குற்றவாளிகளும் இதுபோன்ற சின்னங்களைத் தவறாகப் பயன்படுத்தி தப்பிவிடுகின்றனர். 

நாட்டில் அனைவலரும் சமமாக நடத்தப்படுகின்றனரா என்பதை மக்களும் எதிர்பார்ப்பார்கள்” என்றார். தேசிய, மாநில சின்னங்களை தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்கக் கோரிய வழக்கில், காவல் துறை தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், வாகன விதிமீறல்களில், நம்பர் பிளேட் தொடர்பாக 1.55 லட்சம் வழக்குகளும், கறுப்பு ஸ்டிக்கர் ஒட்டப்பது தொடர்பாக வழக்குகளும் பதிவாகியிருந்தது. ஆனால், தேசிய, மாநில சின்னங்களை தவறாகப் பயன்படுத்தியதாக ஒரு வழக்கக் கூட பதிவாகவில்லை என்பது கவனிக்கத்தக்கது.