×

"சேவல் சண்டைக்கு அனுமதி கொடுக்க கூடாது" - அரசுக்கு ஹைகோர்ட் கிளை உத்தரவு!

 

பொங்கல் திருவிழா என்றாலே கிராமங்களில் வீர விளையாட்டுக்கள் களைகட்டும். ஜல்லிக்கட்டு, சேவல் சண்டை, மஞ்சு விரட்டு, ரேக்ளா ரேஸ் பண்டிகைகள் நடைபெறுவது வழக்கம். மதுரை, திருச்சி, சிவகங்கை போன்ற தென் மாவட்டங்களில் இந்தப் போட்டிகள் நடைபெறும். ஜல்லிக்கட்டு நடக்குமா நடக்காதா என்ற கேள்விக்கு நேற்று விடை கிடைத்துவிட்டது. கொரோனா பரவல் காரணமாக மிகக் கடுமையான கட்டுப்பாடுகளுடன் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறவிருக்கின்றன.

இச்சூழலில் தேனி மாவட்டம், உத்தமபாளையத்தில் வெறும் கால்ளுடன் சேவல் சண்டை நடத்த அனுமதி கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தங்கமுத்து என்பவர் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி சுவாமிநாதன், ஆயுதங்களின்றி வெறும் கால்களுடன் சேவல் சண்டை நடத்த அனுமதியளித்தார். சேவலின் கால்களில் பிளேடு, கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை கட்டக்கூடாது எனவும், சேவல் உயிரிழக்கும் வகையில் சண்டை நடத்த கூடாது எனவும் தெரிவித்திருந்தார். 

இதனிடையே சேவல் சண்டைக்கு தடை விதிக்கக் கோரி கரூர் மாவட்டம் பூலம்வலசை சேர்ந்த பிரேம்நாத் மனு தாக்கல் செய்தார்.  அம்மனுவில், "வெறும் கால்களில் சேவல் சண்டை நடத்துவதாக அனுமதி வாங்கிவிட்டு, சட்டத்திற்கு புறம்பாக ஆயுதங்களை கட்டி சேவல் சண்டை நடத்துகின்றனர். இதனால் ஆண்டுதோறும் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படுகிறது. ஆகவே சேவல் சண்டை நடத்த தடை விதிக்க வேண்டும்” என குறிப்பிடப்பட்டிருந்தது. 

இந்த வழக்கு நீதிபதிகள் வைத்தியநாதன், ஜெயச்சந்திரன் அமர்வின் முன் விசாரணைக்கு வந்தது. சேவல் சண்டை போட்டிகள் நடத்துவது குறித்து அரசின் நிலைப்பாடு என்ன, கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் எவ்வாறு சேவல் சண்டைக்கு அனுமதி வழங்கப்பட்டது என கேள்வியெழுப்பினர். இறுதியில் ஜன.25 வரை தமிழகம் முழுவதும் சேவல் சண்டைக்கு அனுமதி வழங்க கூடாது என உத்தரவிட்டனர்.