×

"தண்ணீர் திருடும் விவசாயிகளுக்கு கடன், கரண்ட் கட்" - அரசுக்கு ஹைகோர்ட் உத்தரவு!

 

கோவை பரம்பிக்குளம்-ஆழியாறு இணைப்பு திட்ட கால்வாயிலிருந்து 2 தனி நபர்களுக்கு தண்ணீர் எடுக்க பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்யவேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்தத் திட்டத்தின் முன்னாள் தலைவர் பரமசிவன் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், "தண்ணீரை அனைத்து விவசாயிகளுக்கும் சமமாகப் பங்கிட வேண்டும். இந்த 2 நபர்கள் அனுமதி பெற்று சட்டவிரோதமாக அளவுக்கு அதிகமாக தண்ணீர் எடுக்கிறார்கள். இதனால் மற்ற விவசாயிகள் மிகக் கடுமையாகப் பாதிக்கப்படுகிறார்கள். 

ஆகவே இந்த உத்தரவை ரத்து செய்து, அனைவருக்கும் சமமாக நீர் பங்கிடும் வகையில் நடவடிக்கை எடுக்க உத்தரவி வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மனுவானது நீதிபதி எஸ்எம் சுப்பிரமணியம் முன்னிலையில் விசாரிக்கப்பட்டது. அப்போது அரசு நீர்வள துறை பொறியாளர்,  "அதிகாரிகள் ஆய்வுக்குச் சென்றால் தண்ணீர் எடுக்கக் கூடிய நபர்கள் குழாய்களை கழற்றிவைத்து விட்டு சென்றுவிடுகிறார்கள். அதிகாரிகள் திரும்பியவுடன் மீண்டும் குழாய்களைப் பொறுத்தி தண்ணீரை திருடிக் கொள்கிறார்கள். இதனை தடுக்க முடியவில்லை. 

எனினும் தண்ணீர் திருட்டில் ஈடுபடும் சம்பந்தப்பட்ட விவசாயிகளுக்கு மின் இணைப்பை துண்டிக்க தமிழ்நாடு மின் வாரியமான டான்ஜெட்கோவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளோம்” என்றார். இருதரப்பு வாதங்களைக் கேட்டறிந்த நீதிபதி, "தண்ணீர் திருட்டு வழக்குகளில் சிக்கிய விவசாயிகளுக்கு விவசாய கடன் வழங்க கூடாது. மேலும், சட்டவிரோதமாக தண்ணீர் எடுப்பவர்களுக்கு உடந்தையாக இருக்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மானிய விலையில் உரம், விதை பெற முடியாதபடி அவர்களை கருப்பு பட்டியலில் சேர்க்க வேண்டும். அவர்கள் மீது குற்ற வழக்குகள் பதிந்து மின் இணைப்பை துண்டிக்க வேண்டும்” என உத்தரவு பிறப்பித்தார்.