×

"ஜெ.தீபாவுக்கே வேதா நிலையம்"... உறுதிசெய்த ஹைகோர்ட் - அதிமுகவுக்கு பின்னடைவு!

 

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் தோட்ட இல்லமான வேதா நிலையம் நினைவு இல்லமாக மாற்றப்படும் என முந்தைய அதிமுக அரசு அறிவித்திருந்தது. மேலும் சட்டம் இயற்றி வேதா நிலையத்தை அரசுடமையாக்கியது. இதனை எதிர்த்து ஜெயலலிதாவின் வாரிசுகளான அவரின் அண்ணன் பிள்ளைகள் தீபா, தீபக் ஆகிய இருவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அதேபோல வேதா நிலையத்துக்கு 67 கோடியே 90 லட்சம் ரூபாயை இழப்பீடை அரசு செலுத்தியது. இதை எதிர்த்தும் வழக்கு தொடரப்பட்டிருந்தது.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி சேஷசாயி, வேதா நிலையத்தை அரசுடமையாக்கி பிறப்பிக்கப்பட்ட சட்டத்தை செல்லாது என உத்தரவிட்டார். 3 வாரத்துக்குள் வேதா நிலையத்தை வாரிசு தாரர்களான தீபா, தீபக்கிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும், கீழமை நீதிமன்றத்தில் அரசு செலுத்திய ரூ.67.95கோடி இழப்பீடு தொகையை அரசு திரும்ப பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் வரி பாக்கியை வசூலிப்பதற்கான நடவடிக்கையை வருமான வரித்துறை மேற்கொள்ளலாம் என்றும் ஆணையிட்டார்.

இதையடுத்து 4 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த டிச.11ஆம் தேதி ஜெ.தீபாவால் வேதா இல்லம் திறக்கப்பட்டது. இதையடுத்து தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து அதிமுக உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. அம்மனுவை நீதிமன்றம் விசாரணைக்கும் எடுத்துக்கொண்டது. இதனிடையே தற்போதைய திமுக அரசு, தனி நீதிபதி உத்தரவுகள் அனைத்தையும் ஏற்றுக்கொள்வதாகவும், மேல்முறையீடு செய்யப்போவது இல்லை எனவும் திட்டவட்டமாக கூறிவிட்டது. இதன் காரணமாக தனி ஒரு ஆளாக அதிமுக சார்பில் வேதா நிலைய அறக்கட்டளை உறுப்பினர் சிவி சண்முகம் மட்டுமே போராடி வந்தார்.

அதற்கு இன்று முற்றுப்புள்ளி வைத்துள்ளது உயர் நீதிமன்றம். ஆம் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுகள் செல்லும் என அறிவித்து, அதிமுக தொடர்ந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. தனி நீதிபதியின் தீர்ப்பை உறுதிசெய்தும் உத்தரவிட்டது. இதற்குப் பின்னர் உச்ச நீதிமன்றத்தை அதிமுக நாடுமா என்ற கேள்வியெழுந்துள்ளது. ஆனால் கட்சி நிதியைப் பயன்படுத்தி வேதா இல்லத்தை வாங்க முயற்சிக்கலாம் என இன்னொரு தகவலும் கூறப்படுகிறது. அதுவே அதிமுகவின் இறுதி அஸ்திரமாக இருக்கக் கூடும்.