×

மத்திய கைலாஷ் சந்திப்பில் 'L' வடிவ பாலம் திறப்பு

 

புதிதாக திறக்கப்பட்ட மத்திய கைலாஷ் எல் வடிவ மேம்பாலத்தின் கீழே வைக்கப்பட்டுள்ள இயல், இசை, நாடகம் மற்றும் தமிழர்களின் பாரம்பரிய கலைகளின் சிலைகள் பார்ப்பவர்களை கவர்ந்துள்ளது.


ராஜீவ் காந்தி சாலை மற்றும் சர்தார் பட்டேல் சாலையை இணைக்கும் மத்திய கைலாஷ் சந்திப்பில் ரூ.60.68 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள எல் வடிவ மேம்பாலத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்  திறந்து வைத்தார். இந்த பாலத்தின் கீழ் பகுதியில் இயல், இசை, நாடகம் மற்றும் தமிழர்களின் பாரம்பரிய கலைகளின் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளது. இதன்படி, உறுமி தாளம், தபேலா, நாதஸ்வரம், யாழ், வீணை, பொய்க்கால் குதிரை, களரி, மண்பாண்ட கலை, ஒயிலாட்டம் கும்மியாட்டம், பறையாட்டம், கோலாட்டம், சிலம்பாட்டம் கரகாட்டம் உள்ளிட்ட 20 சிலைகள் பாலத்தின் கீழ் பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது. 


இது தொடர்பாக, இந்த சிலைகளை வடிவமைத்த ஆர்கிடெக் சைன் பி தாஸ் கூறுகையில், இந்த இடம் முக்கியமான இடம் என்பதால் தனித்துவமான முறையில் இதை வடிவமைக்க வேண்டும் என்று நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்ததாகவும் அதன்படி இந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் கூறினார். மேலும், 35க்கு மேற்பட்ட சிலைகளில் மாதிரிகளை நெடுஞ்சாலைத்துறை அமைச்சரிடம் அளித்ததாகவும் அவர்  20 சிலை மாதிரிகளை உறுதி செய்வதாகவும் தெரிவித்தார். சாதாரண செங்கல் போன்ற உள்ள ஆனால் அதைவிட நான்கு மடங்கு அதிகம் விலை கொண்ட வயர் கட் பிரிக் கொண்டு இந்த சிலைகள் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.