×

சினிமாவில் பாடகியாக அறிமுகமாகிறார் 'வில்லுப்பாட்டு' மாதவி..!!

 

7 Miles Per Seconds Productions சார்பில் சாமுவேல் மேத்யூ தயாரித்துள்ள 'வேட்ட சாமி' திரைப்படத்தில், நடிகர்கள் அருள்நிதி இயக்குநர் அமீர் இருவரும் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் இயக்குநர் தமிழ், விஜி சந்திரசேகர், 'ஆடுகளம்' நரேன், அர்ஜெய், OAK சுந்தர், மதுசூதனன், மைனா நந்தினி, கவிதா பாரதி, நந்தினி ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

வீரமும், தெய்வ நம்பிக்கையும் மண்ணின் அடையாளம் என்பதை கதைக்கருவாக கொண்டு உருவாகியுள்ள இந்தத் திரைப்படத்தை, 'பம்பர்' திரைப்படத்தை இயக்கிய எம்.செல்வகுமார் இயக்கியுள்ளார். ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்ய, எடிட்டிங் பணிகளை ரூபன் மேற்கொண்டு வருகிறார். சண்டைக் காட்சிகளை, சிறுத்தை கணேஷ் வடிவமைத்துள்ளார்.

படப்பிடிப்பு முடிவடைந்து படத்தொகுப்பு மற்றும் பின்னணி இசைக்கான பணிகள் நடைபெற்று வரும் நிலையில், 'வேட்ட சாமி' திரைப்படத்தில் வில்லுப்பாட்டு மாதவி பாடகியாக அறிமுகமாவதை இசையமைப்பாளர் ஜிப்ரான், தனது சமூக வலைதளப் பக்கங்களில் மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார். மேலும் நம்முடைய மண் சார்ந்த இசையில் இசையமைப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்துள்ளார்.

வில்லுப்பாட்டு கலை மூலம் மக்களிடையே தனித்துவமான அடையாளம் பெற்ற கலைஞர், மாதவி. சமூக வலைதளங்களில் மாதவிக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. தென் தமிழ்நாட்டை பொறுத்தவரையில் எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும், மாதவி பாட வருகிறார் என்று கூறினாலே அந்த திருவிழாவே களைகட்டும் அளவிற்கு ஆயிரக்கணக்கானோர் கூடுவார்கள். இவரது தமிழ் உச்சரிப்பு மற்றும் பாடும் விதமும் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

இதுவரை நூற்றுக்கணக்கான நிகழ்ச்சிகளில் பங்கேற்று பாடியுள்ள மாதவி, தன் வில்லிசைக் கலைக்காகவே பல விருதுகளை வாங்கிக் குவித்துள்ளார். மேலும் நாட்டுப்புற இசை மற்றும் பாரம்பரியக் கலையை 2கே கிட்ஸ் எனப்படும் இன்றைய இளைய தலைமுறையினரிடமும் கொண்டு சேர்த்து வருகிறார். இன்றைய தலைமுறையினருக்கு வில்லுப்பாட்டு கலையின் அடையாளமாக திகழும் மாதவி சினிமாவில் பாடகியாக அறிமுகமாகியுள்ளது கோலிவுட் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது.